சோலார் பம்ப்செட் அமைக்க 90% மானியம்! வேளாண் துறை அறிவிப்பு!
விவசாயிகள் 90 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்களை அமைத்துப் பயன்பெறலாம் எனத் தமிழக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. சூரிய சக்தி அதிக அளவில் கிடைக்கும் தமிழகத்தில், அதனை மின் சக்தியாக மாற்றி வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்திட முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பழப்பயிர் சாகுபடிக்கு 40% மானியம் அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்க!!
தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்காகத் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், விவசாயிகளுக்கு அரசு 40% மானியம் வழங்குகிறது. இம்மானியமானது, கொய்யா, மா, பலா, வாழை, பப்பாளி, எலும்பிச்சை, நெல்லி, அத்தி முதலான பழ மரங்களை வளர்க்க வழங்கப்பட இருக்கிறது. இதைப் பெற தேவையான ஆவணங்களாக நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை ஆகும். தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை www.tnhorticuclture.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் புதிய வேளாண் கண்டுபிடிப்புக்கு ரூ. 2 லட்சம் பரிசு!
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைக் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் பெருமளவில் இப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் இயந்திரங்கள் தரமுடையதாகவும், விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்த கண்டுபிடிப்பாகவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர் விடுதியில் தோட்டம் அமைக்க மரங்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் குருக்கத்தி கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர் விடுதியில் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதனை நாகப்பட்டின மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். அதோடு மூலிகைச்செடிகளையும் மரக்கன்றுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்தியாவின் கொசோவோ பொருளாதார வர்த்தக அலுவலகத்துக்கும் கிரிஷி ஜாக்ரனுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
தென்கிழக்கு ஐரோப்பா, கொசோவாவில் உள்ள பொருளாதார வர்த்தக அலுவலகத்துக்கும், புதுதில்லியில் உள்ள கிரிஷி ஜாக்ரன் நிறுவனத்துக்கும் இயக்குநர் ஜெனரல் பயல் கனோடியா மற்றும் கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டாம்னிக் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டு நிறுவனங்களும் உள்நாட்டிலோ அல்லது உலக அளவிலோ இந்தியாவின் விவசாய வணிகத்தை மேம்படுத்த தங்களால் இயன்ற செயல்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன் வளர்ப்பு குறித்து திருச்சியில் இலவசப் பயிற்சி!
புதிய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் மீன் வள பல்கலை கழகத் திருச்சி நிலையான மீன்வளர்ப்பு மையம் இணைந்து நடத்தும் ஒரு நாள் இலவச அலங்கார மீன் பயிற்சியானது செயல் விளக்கத்துடன் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், குழுமணி மெயின் ரோடு அலங்கலம், ஜீயபுரத்தில் உள்ள மீன் வள பல்கலை கழக ஆராய்ச்சி மையத்தில் நேற்று (3.11.2022) நடைபெற்றது. இப்பயிற்சியில், அலங்கார மீன் இனங்கள், குட்டியிடும் மீன்கள் மற்றும் முட்டையிடும் மீன்களின் இனப்பெருக்கம் பற்றிய பாடங்கள், செயல்முறை கூடிய தொழில்நுட்பங்கள், மீன்வளர்ப்புக்கான உபகரணங்கள், மீன்களுக்கான உணவுகள், உணவு தயாரிப்பு முறைகள், நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் அலங்கார மீன்களைச் சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
விவசாயத் துறையினை மேம்படுத்தும் CII Agro tech India 2022 மற்றும் Water Expo 2022 நிகழ்வுகள்!
இந்திய உணவு மற்றும் வேளாண் துறைகளில் புரட்சியை ஏற்படுத்திய இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முதன்மையான நிகழ்வான CII Agro tech India 2022 இன்று தொடங்கியது. நிலையான விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான டிஜிட்டல் மாற்றம்' என்பது CII அக்ரோ டெக் இந்தியா 2022 இன் கருப்பொருளாகும். அதோடு, புதுதில்லி கிரேட்டன் நொய்டாவில் Water Expo 2022 சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க
மீன் வளர்ப்பு குறித்து திருச்சியில் இலவச பயிற்சி
புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிப்புக்கு பரிசு! இதோ முழு விவரம்