வேளாண் விளைபொருட்களின் மதிப்பைக் கூட்டும் சூரிய ஒளி கூடார உலர்த்தியை (Solar Dryer)பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியமாக 60 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சூரிய கூடார உலர்த்தி
விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை அப்படியே விற்பதைக் காட்டிலும், அதன் மதிப்பைக் கூட்டி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பெரும்பாலான விவசாயிகள் திறந்த வெளியில் தங்களின் விளைப்பொருட்களை உலத்தி அதனைச் சந்தை படுத்துகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த பொருட்களை மண் தரையிலோ, சாலையிலோ காய வைத்தால் பொருளின் நிறம் மங்குகிறது, கல், மண் போன்றவையும் கலந்து தரம் குறையும்.
இதனைக் கருத்தில் கொண்டும், சூரியசக்தி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும் வேளாண் பொறியியல் துறை மூலம் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்குச் சூரிய கூடார உலர்த்தி அமைக்க அரசு 60 சதவீதம் மானியம் வழங்குகிறது.
சூரிய கூடார பயன்கள்
-
சூரிய கூடார உலர்த்தி மூலம் விளைபொருட்களைக் காய வைப்பதன் மூலம் விளை பொருட்கள் இக்கூடாரத்தில் உள்ள அதிக வெப்பத்தின் காரணமாகக் குறைந்த நேரத்தில் காய்ந்து விடுகிறது.
-
மேலே கூடார அமைப்பு இருப்பதால் காற்று மற்றும் மழை போன்ற இயற்கை அழிவுகளிலிருந்து பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க உதவுகிறது.
-
விளை பொருட்கள் தரமானதாக இருக்கப் பயன்படுகிறது.
-
இந்த சூரிய கூடார உலர்த்தியினால் 1000 கிலோ கிராம் முதல் 2000 கிலோ கிராம் வரையிலான வேளாண் விளைப்பொருட்களை இரண்டு நாளில் உலர்த்த முடியும்
-
சீரான வெப்பத்தில் தூய்மையான இடத்தில் காய வைப்பதால் பொருளின் தரம் மேம்படுவதுடன் , விளைப்பொருட்களின் குணமும், மணமும் மாறாமல் இருக்கிறது இதனால் வேளாண் பொருளின் தரம் பன்மடங்கு உயர்கிறது.
சூரிய கூடார உலர்த்தி அமைக்க மானியம்
-
ஒரு சூரிய கூடார உலர்த்தி, 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி அமைக்கலாம் இதற்கு 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவாகிறது.
-
சூரிய கூடார உலர்த்தி அமைக்கச் செலவாகும் தொகையில் 60 சதவீத தொகை சிறு, குறு ஆதிதிராவிடர் பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
-
இதர விவசாயிகளுக்கு 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
-
அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
-
சூரிய கூடார உலர்த்திகள் மூலம் விவசாயிகள் தங்களின் வேளாண் விளை பொருட்களான நிலக்கடலை, கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, மிளகாய், வாழைப்பழம், மக்காச்சோளம், மல்லி, முந்திரி, கீரை வகைகள் போன்றவற்றை உலர்த்தலாம்.
இது தொடர்பான விபரங்கள் பெறுவதற்கும், விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கும் விவசாயிகள் உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட வேளாண் துறை சார்ந்த அலுவலகத்தினை தொடர்புகொள்ளலாம்.
More News...
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும். இந்த திட்டம் தெரியுமா?