மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்திற்கான கடன் வசதி முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 29.11.2023 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-
வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின் நோக்கம்: அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்களான விநியோக தொடர் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், குளிர்பதன தொடர் சேவைகள், தளவாடவசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள்- சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் - சூரியமின் சக்தியுடன் கூடிய உட்கட்டமைப்பு, பழுக்கவைக்கும் அறைகள் முதலிய வேளாண் உட்கட்டமைப்பினை ஏற்படுத்த இத்திட்டத்தின் கீழ் வங்கிகடன் பெற்று பயனடையலாம்.
திட்டத்தின் சலுகை விவரம்:
வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் 3 சதவீதம் வட்டி சலுகை, அதிகபட்சமாக ரூ.2.00 கோடி வரையிலான திட்ட முதலீட்டுக்கு, 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும். கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் (CGTMS) ரூ.2.00 கோடி வரையும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு நிதி ஆதரவு போன்ற நிதி வசதிகள் மற்றும் இதர ஒன்றிய, மாநில அரசு திட்டங்களிலும் 3 சதவீத வட்டி சலுகை பெற்று பயன் பெறலாம். மேலும் 08.07.2020 க்கு பின்னர் பெறப்பட்ட அனைத்து வேளாண் உட்கட்டமைப்பு வங்கி கடன்களை இத்திட்டத்தில் இணைத்தும் பயன்பெறலாம்.
திட்ட பயனாளிகள் யார்?
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (PACS), சந்தைப்படுத்தல் கூட்டுறவுசங்கங்கள் (MCS), விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) மற்றும் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் (SHGS) கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (JLGS) பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர் மத்திய மாநில அரசு உதவி பெறும் போது -தனியார் கூட்டு திட்டங்கள், சுய உதவிக் குழுக்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
கடன் வசதி முகாம் நடைப்பெறும் இடம்:
வரும் 29.11.2023 புதன்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிப்பிக்கூட கூட்ட அரங்கில் வைத்து வேளாண் உட்கட்டமைப்பு நிதிக்கான லோன் முகாம் நடைபெற உள்ளது.
இதில் பயன்பெற விரும்புவோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு 9361304598 (மாவட்ட ஆதார நபர்) 9788287514 (தூத்துக்குடி கோட்டம்) 9655776828 (கோவில்பட்டி கோட்டம்) 9488102018 (திருச்செந்தூர் கோட்டம்) எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
நெற்பயிர் பால் பிடிக்கும் பருவத்தில் இதை பண்ணுங்க- ஆட்சியர் அறிவுறுத்தல்