கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு புறம் இருக்கிறதென்றால், அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மறுபுறம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என பல கட்டங்களைத் தொடர்ந்து கடந்த ஊரடங்கால் தினக்கூலிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில் கடன் வாங்கி அன்றாட வாழ்க்கையை ஓட்டிய அவர்கள் பின்னர், வாங்கியக் கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா நெருக்கடிக்கால கடன் (Corona Crisis Loan)
மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கும் ஏழை வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கொரோனா நெருக்கடிக்கால கடன் (Corona Crisis Loan) என்ற பெயரில், தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
உத்தரவாதம் தேவையில்லை (No Guarantee)
குறிப்பாக மக்கள் வங்கிக்கடன் பெறுவதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற எந்தவித ஆவண உறுதிப்பத்திரமும் அளிக்கத் தேவையில்லை (Guarantee) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில் சுயமாக சிறு தொழில் தொடங்க முன்வருவோராக இருந்தால், அவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் வர்த்தக வங்கிகளின் சார்பில், (MFIs and NBFCs) (Micro Financing Institutions and Non-Banking Finance Companies) எனப்படும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடன் பெற விரும்புவர்கள் இந்த நிதி நிறுவனங்களை நேரில் அணுகி, விண்ணப்பிக்கலாம். இதைத் தவிர https://www.udyamimitra.in/ என்ற இணைதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முத்ரா சிசுக் கடன் சலுகை
இதேபோல், மத்திய அரசின் சிசு முத்ரா யோஜனாத் திட்டத்தின் கீழ் குறுதொழில் செய்ய கடன் பெறுபவர்களுக்கு, கடனுக்கான வட்டியில் 2 சதவீத வட்டி மானிய சலுகை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொதுவாக இந்தத் திட்டத்தில், கடன் பெறுவோருக்கு 9 முதல் 12 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். முறையாக பணம் திருப்பி செலுத்துவோருக்கு இந்த வட்டியில் இருந்து, 2 சதவீதம் சலுகை மானியாக வழங்கப்படும் என்றும், எஞ்சிய 7 சதவீத வட்டியை மட்டுமே கடன் தாரர்களிடம் இருந்து வங்கிகள் சார்பில் வசூலிக்கப்படும்.
இந்த தி ட்டத்தின் கீழ் கடன் பெற்றால் அடுத்த ஓராண்டிற்கு, அதாவது 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மே 31ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
கூடுதல் கட்டணம் இல்லை (No Processing Charge)
முத்ரா கடன் திட்டத்தில் கடன் பெறுவதற்கும் ஆவண உத்தரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை. மேலும் Processing Charge என்ற பெயரில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க...
கால்நடை துறையை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு- மத்திய அரசு
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?