நேற்றைய தினம் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கான நலத்திட்டங்களில் ஒன்றான PM kisan நிதியின் 17-வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதோடு 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் ஆகும்.
பி.எம்.கிசான் திட்டத்தின் நோக்கம்:
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இது அவர்களது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது.
இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்தார். அதன் தொடர்ச்சியாக, 15-வது தவணையினை கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதியும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 16-வது தவணையினை வருகிற பிப்.28 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்விலும் பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விடுவித்தார்.
17- வது தவணை:
2024-ல் நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக மோடி நேற்றைய தினம் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் முதல் கையெழுத்தாக, இன்று PM kisan நிதியின் 17-வது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
Read also: 20-க்கும் மேற்பட்ட வாழை இரகம்- குமரி மாவட்ட விவசாயினை கௌரவித்த ICAR-IIHR
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி
கோப்பில் கையெழுத்திட்ட பிறகு, “எங்களது அரசு விவசாய பெருமக்களுக்கு முழு அர்ப்பணிப்புள்ள அரசு. அந்த வகையில் பிரதமராக பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது மகிழ்ச்சி. வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்." என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 17 வது தவணை பெறும் பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:
- PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://pmkisan.gov.in/)
- வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்
- அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
- இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
- 17-வது தவணை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
- PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் பின்வரும் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். (pmkisan-ict@gov.in)
PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
சூதாட்ட களமா விவசாயம்? விவசாயிகளின் நிலையான வருமானத்திற்கு தீர்வு என்ன?
Stop Banana Green: வைரலாகும் டெஸ்க்டாப் வாழைப்பழம் வளர்ப்பு !