நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., தலைமையில் நேற்று (05.11.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சிங்க் சல்பேட் மற்றும் நெல் நுண்ணோட்ட கலவையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் பிஎம் கிசான் திட்டம் தொடர்பாக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்தும், அத்திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
பிஎம் கிசான் திட்டம்:
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின்கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ 2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (India Post Payment Bank IPPB) சேமிப்பு கணக்கு துவங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத 31.01.2019-க்கு முன் தனது பெயரில் சொந்த நிலம் உடைய தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் மற்றும் நில விவரங்களை கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்யாதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் PM KISAN வலைதளத்தில் "Updation of Self Registered Farmers" என்ற முகப்பில் சென்று பொது சேவை மையங்கள் மூலம் விடுபட்ட விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே பயனாளியாக இருந்து தவணை தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பணிபுரியும் வேளாண்மை விரிவாக்க பணியாளர்களை அணுகி குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதுவரை e- KYC செய்யாத பயனாளிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களில் கை விரல் ரேகை பதிவின் மூலமாகவோ அல்லது வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள விரிவாக்க பணியாளர்களை தொடர்பு கொண்டு முகபாவனை பதிவு (Facial recognition) மூலமாகவோ e-KYC செய்து பயன்பெறுமாறும் விவசாயிகளுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 2024-25 (SADS):
இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாற்று பயிராக பயறு வகை, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200/- ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம் மற்றும் துத்தநாக சல்பேட்டுக்கு ஏக்கருக்கு ரூ.250/- வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா (RKVY) வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம்- 2024-2025:
ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டதின் கீழ் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்து பயன்பெறுவதற்கு ஏதுவாக தேக்கு, கொய்யா, மஹாகனி, நீர்மருது, இலுப்பை மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் "உழவன் செயலி" மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
Read more:
நெருங்கும் இறுதி தேதி- பயிர் காப்பீட்டினை விவசாயிகள் மேற்கொள்ள அரசு புது முன்னெடுப்பு!
எண்ணெய் பனை சாகுபடி: விவசாயிகளை ஊக்குவிக்க மானியம் வழங்கும் தோட்டக்கலைத்துறை