கொரோனா கால பொருளாதார நெருக்கடிநிலையை சாமாளிக்க 35,000 கோடி ரூபாய் முதலீட்டில் 9 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக உணவு பதப்படுத்துதல் துறையின் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை (PM Formalization of Micro Food Processing Enterprises) மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர், ரூ.35,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த 9 லட்சம் பேருப்பு வேலைவாய்ப்புகள் கிடைக்கும், இந்த திட்டதால் 8 லட்சம் தொழிற்சாலைகள் பலன் அடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
PM FME திட்டத்தின் நோக்கம்
உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தினால் (MoFPI) இந்தியா முழுவதும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம்,
-
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கும் வசதிகளை அதிகரிக்கச் செய்தல்.
-
அமைப்புசாரா துறையில் இருந்து முறைசார்ந்த தொழில் துறையாக மாற்றுதல்.
-
கழிவுகளை ஆதாயமாக்கும் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
-
மலைப் பகுதி மாவட்டங்களில் சிறிய வனப்பொருள்கள் மீது கவனம் செலுத்துதல்.
PM FME திட்டத்தின் சிறப்பம்சங்கள்
-
மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் திட்டம். மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும்.
-
இந்தத் திட்டம் 2020-2021 முதல் 2024-2025 வரையில் 5 ஆண்டு காலத்துக்கு அமல் படுத்தப்படும்.
-
அழுகும் பொருள்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
தனிநபர் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் தங்களின் தர நிலையை மேம்படுத்த நினைத்தால், தகுதி வாய்ந்த திட்டத்துக்கான செலவில் கடன் இணைப்பு மூலதன மானியம் 35 சதவீதம் என்ற விகிதத்தில் பெறலாம். ஒரு தொழிற்சாலைக்கு ரூ.10 லட்சம் என்ற அதிகபட்ச வரம்பு உண்டு. தொழில் மூலதனத்துக்கும் சிறிய உபகரணங்கள் வாங்குவதற்கும் சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆரம்பக்கட்ட மூலதனமாக ரூ.40,000 வழங்கப்படும்.
பொது பதப்படுத்துதல் வசதி, ஆய்வுக்கூடம், சேமிப்புக் கிடங்கு, குளிர் பதன சேமிப்புக் கிடங்கு, பேக்கேஜிங் மற்றும் இன்குபேடிங் மையம் உள்ளிட்ட பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடன் இணைப்பு மானியம் 35% என்ற அளவில் உதவி தரப்படுகிறது.
சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங் ஆகியவற்றுக்கான உதவி என்பது நுண்உற்பத்தி தொழில் அலகுகளின் மற்றும் குழுக்களின் பிராண்டுகளை மேம்படுத்த மாநில அரசு அல்லது பிராந்திய அளவில் 50% மானியத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!
ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!
தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!