பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா ( PM-SYM ) திட்டத்தில் இணைவதன் மூலம் குறைந்தப்பட்சம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக 3,000 பெறலாம். இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம், என்ன பயன் என்பதனை இப்பகுதியில் முழுமையாக காணலாம்.
( PM-SYM ) எனப்படும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் என்பது அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்கள் 60 வயதுக்குப் பின் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற வழிவகுக்கிறது. பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா 15 பிப்ரவரி 2019 அன்று தொடங்கப்பட்டது.
அமைப்புசாராத் தொழிலாளர்கள் யார்?
காய்கறி விற்பவர்கள், வீடு துடைப்பவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், தையல்காரர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என மாத வருமானம் ₹ 15,000 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் நபர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்களின் வயது குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், அதிகப்பட்சம் 40 வயதினை மிகாமலும் இருத்தல் வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சிறுத்தொகையினை நீங்கள் மாதந்தோறும் செலுத்தும் நிலையில், அரசின் பங்கும் மாதந்தோறும் செலுத்தப்பட்டு வரும். உதாரணத்திற்கு நீங்கள் 18 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் உங்களின் 60-வது வயது வரை மாதந்தோறும் ரூ.55 செலுத்துவீர்கள். அரசும் தன் பங்காக ரூ.55-ஐ மாதந்தோறும் செலுத்தும். நீங்கள் 30 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் மாதந்தோறும் ரூ.105-ஐ நீங்களும், அரசின் சார்பில் ரூ.105-ம் செலுத்தப்படும். 60 வயது பூர்த்தி அடைந்தப்பின் மாதந்தோறும் குறைந்தப்பட்சம் ரூ.3000 உங்கள் வங்கிக்கணக்கில் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும்.
திட்டத்தில் இணைவது எப்படி?
இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கைத் திறக்கும் நபரிடம் சில ஆவணங்கள் இருக்க வேண்டும்.
- ஆதார் அட்டை (மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்)
- வங்கிக் கணக்கின் புத்தகம்
- தங்களின் புகைப்படம்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். நாட்டின் பொது சேவை மையங்களும் இந்தக் கணக்கைத் திறக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனிலும் கணக்கு தொடங்கலாம்:
பிரதமர் ஷ்ரமியோகி மன்தன் யோஜனா ( PM-SYM ) திட்டத்தின் கீழ் ஆன்லைன் கணக்கையும் தொடங்கலாம். ஆன்லைன் கணக்கைத் திறக்க, ஆர்வமுள்ள நபர் www.maandhan.in ஐப் பார்வையிட வேண்டும். இணைய பக்கத்தில் நீங்கள் சுய பதிவு என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அங்கு கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, பெயர், மின்னஞ்சல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்புவதன் மூலம், OTP (OTP) உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP ஐ உள்ளிட்ட பிறகு, நீங்கள் சரிபார்ப்பு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஒரு விண்ணப்பப் படிவம் உங்கள் முன் திறக்கும். இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவுதான், இதற்குப் பிறகு உங்கள் கணக்கு திறக்கப்படும்.
ஒருவேளை கணக்கு தொடங்கியவர் இறந்தால் என்ன ஆகும்?
ஓய்வூதியம் பெறும் போது, சந்தாதாரர் இறந்தால், பயனாளியின் மனைவி, குடும்ப ஓய்வூதியமாக பயனாளி பெற்ற ஓய்வூதியத்தில் 50% பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒரு பயனாளி வழக்கமான பங்களிப்பை அளித்து, ஏதேனும் காரணத்தால் (60 வயதுக்கு முன்) இறந்து விட்டால், அவருடைய துணைவி, வழக்கமான பங்களிப்பைச் செலுத்தி, திட்டத்தில் சேரவும் தொடரவும் இயலும்.
விருப்பம் இல்லாதப்பட்சத்தில் விதிகளின்படி ( PM-SYM ) திட்டத்திலிருந்து வெளியேறவும் உரிமை உண்டு.
யாரெல்லாம் இணைய முடியாது?
அரசு ஊழியர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மற்றும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. வருமான வரி செலுத்துபவரும் ( PM-SYM ) திட்டத்தில் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் குறித்து மேலும் தகவலைக் காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்-
மேலும் காண்க:
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்- விதவை என்கிற சொல்லினை மாற்ற கோரிக்கை