பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" PM Vishwakarma திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தினை செப்-17 ஆம் தேதி மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் வெற்றி குறித்த தகவல்களை அமைச்சர் ரானே, தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளவை: பிரதமர் விஸ்வகர்மா திட்டம் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாகும் என்றும், திட்டம் தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைப் பெறுவது திட்டத்தின் வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் விஸ்வகர்மா திட்டம், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நமது விஸ்வகர்மா சகோதர சகோதரிகளின் விரிவான வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும், இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் என்றும் ஒன்றிய அமைச்சர் தனது பதிவில் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் விஸ்வகர்மா சகோதர சகோதரிகளுக்கு பயிற்சி, தொழிற் கருவிகள் மற்றும் பிணையற்ற கடன்கள் வழங்கப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு, திட்டத்தின் அனைத்து நன்மைகளும் தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.
குறைந்த வட்டியில் கடனுதவி:
பிரதமரின் விஸ்வகர்மா (PM Vishwakarma) திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.
மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் பயன்படும். முதற்கட்டமாக பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் 18 பாரம்பரிய தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
- தச்சர்
- படகு தயாரிப்பாளர்
- கவசம் தயாரிப்பவர்;
- கொல்லர் (லோஹர்)
- சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்;
- பூட்டு தயாரிப்பவர்
- பொற்கொல்லர் (சோனார்);
- குயவர் (கும்ஹார்);
- சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்;
- காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்;
- கொத்தனார் (ராஜமிஸ்திரி);
- கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்;
- பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்);
- முடி திருத்தும் தொழிலாளர் (நயி);
- பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்);
- சலவைத் தொழிலாளி (டோபி);
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும் என அரசு தரப்பில் கூறப்படும் நிலையில், இத்திட்டம் குலத்தொழில் முறையினை ஆதரிப்பதாக எதிர்ப்புக்குரலும் கிளம்பியுள்ளது.
மேலும் காண்க: