தென்காசி மாவட்டத்தில் மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர்கள் மற்றும் கிழங்கு வகை நறுமணப் பயிர்களுக்கு 40 சதவீத மானியத்தில் விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேசிய தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தோட்டக்கலை இயக்கத் திட்டமானது மத்திய மாநில நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்களின் விவரம் பின்வருமாறு-
இத்திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய காய்கறிப் பயிர்களில் (வீரிய ஒட்டு ரகம்) குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 15,000 நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலும், பழப்பயிர்களில் கொய்யா அடர் நடவுக்கான பதியன்கள், திசுவாழைக் கன்றுகள், பப்பாளிச் செடிகள், எலுமிச்சைப் பதியன்கள், நெல்லிச் செடிகள் ஆகியவையும் இதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும் உதிரி மலர்கள் (மல்லிகை, சம்பங்கி, செண்டுமல்லி), சுவைதாளிதப் பயிர்கள்(காய்ந்த மிளகாய்) கிழங்கு வகை நறுமணப் பயிர்களுக்கு (இஞ்சி) 40% சதவீத மானியத்தில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.
பயிர்களில் நீர் மற்றும் களை மேலாண்மைக்கான நிலப்போர்வைகள் 50 சதவீத மானியத்திலும், மண்புழு உரம் தயாரிக்கத் தேவைப்படும் நிரந்தர மண்புழு உரப்படுக்கையை கட்டமைக்க பின்னேற்பு மானியமாக 50 சதவீதம் வழங்கப்படும். மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளர்ப்புக்கு தேவையான தேனீக்கள், தேனீப்பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவை 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
பண்ணை இயந்திரங்களான மினி டிராக்டர் (20 குதிரை திறனுக்கு குறைவாக) மற்றும் பவர்டிரில்லர் (8 குதிரை திறனுக்கு குறைவாக) 40 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும், வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீத பின்னேற்பு மானியத்திலும் (ரூ.87,500) மற்றும் விவசாயிகள் காய்கறிகள் விற்பனைக்கு பயன்படுத்தும் வகையில் நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டி 50 சதவீதம் பின்னேற்பு மானியத்திலும் வழங்கப்பட உள்ளன.
உயர் தொழில்நுட்ப தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நிழல்வலைக்கூடம், பசுமைக்குடில் ஆகியவை அமைக்க 50% மானியமும், அறுவடை பின்சார் தரப்படுத்தலுக்கும் பயன்படும் வகையில் சிப்பம் கட்டும் அறை அமைத்திட 50% மானியம் மற்றும் அறுவடை செய்த விளைபொருட்களை சிறந்த முறையில் சேமித்திட குளிர் சேமிப்பு கிடங்குகள் அமைக்க 35 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2 மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
விவசாயிகளின் நம்பிக்கை- விற்பனையில் சாதித்த சோனாலிகா டிராக்டர்
பட்டென்று சரிந்த தக்காளி விலை- மதுரை, திருப்பூர் மார்கெட் நிலவரம்