பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பீட்ரூட் சாகுபடி (Beetroot cultivation)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மொடக்குபட்டி, தளி, கணபதிபாளையம், வல்லக்குண்டாபுரம், அய்யம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில், பரவலாக, பல ஆயிரம் ஏக்கரில், பீட்ரூட் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சாதகமான சீதோஷ்ணநிலை (Favorable climate)
இப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, களிமண் வளம், சொட்டு நீர் பாசன முறை ஆகிய காரணங்களால், பீட்ரூட் விளைச்சல் பிற பகுதிகளை விட அதிகம் உள்ளது. ஏக்கருக்கு, 7 கிலோ விதைகள் வீதம் நடவு செய்யப்பட்டு, 14 டன் வரை விளைச்சல் எடுக்கப்படுகிறது.
மலைப்பகுதியில் மட்டும் விளையும் என பெயர் பெற்ற பீட்ரூட் சாகுபடியை, உடுமலை பகுதி விவசாயிகள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் (Affected farmers)
இந்நிலையில் பல்வேறு காரணங்களால், பீட்ரூட் காய்களுக்கு, போதிய விலை கிடைக்காமல், 90 நாட்கள் சாகுபடிக்குச் செய்த செலவு கூட கிடைக்காமல், விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
பயிற்சி தேவை (Training is required)
எனவே மருத்துவ குணம் கொண்டப் பீட்ரூட் காய் மற்றும் அதன் இலைகளை, மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான பயிற்சியை ஏற்பாடு செய்து தருமாறு விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொழில் நுட்பங்களைத் தோட்டக் கலைத்துறை அளித்தால், உடுமலை பகுதி காய்கறி உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.
விவசாயிகள் கருத்து (Farmers comment)
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : தமிழகத்தில், குறிப்பிட்ட சில இடங்களில், மட்டுமே பீட்ரூட் பயிரிடப்படுகிறது. உடுமலை பகுதியில், விளையும், பீட்ரூட் திரட்சியாகவும், சத்துகள் மிகுந்தும் காணப்படுகிறது. காய்களிலிருந்து பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வாய்ப்புள்ளதாக, வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், பீட்ரூட்டிலிருந்து உடனடி பானம் இனிப்பு ஊறுகாய் ஆகியவை தயாரிக்கலாம் என வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.
ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால் இப்பொருட்களை தயாரிக்க முடியவில்லை. எனவே, தோட்டக் கலைத்துறை பயிற்சி வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், உடுமலை பகுதியில், பீட்ரூட் சாகுபடிப் பரப்பை பல மடங்கு அதிகரிக்க முடியும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!