பயிர்களில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த உயிரியல் முறையைக் கையாள்வது நல்ல பலனைத் தரும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, இரசாயன நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் விளைகின்றன. இம்முறையால் பயிரில் தங்கும் இரசாயன நஞ்சு, மக்களையும் கால்நடைகளையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழலும் மாசடைகிறது. ஆகையால் இந்த நூற்புழுக்களை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம் என தற்போது நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நுண்ணுயிர்களான சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், பாஸ்சூரியா பெனிட்ரன்ஸ், பூசணங்களான டிரைக்கோடெர்மா விரிடி, பொக்கோனியா கிளாமிடோஸ்போரியா, ஆக்டினோமைசிட்ஸ் என்னும் ஸ்ட்ரோப்டோமைசஸ் அவர்மெட்டிலிஸ் போன்றவை, தாவர நூற்புழுக்களை நன்றாகக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன.
உயிரியல் முறையின் பயன்கள் (Benefits of Biological Method)
-
நூற்புழுக்களுக்கு எதிராக இந்த உயிர்க் கொல்லிகள் செயல்படுகின்றன.
-
அதாவது, வேரின் மேற்பகுதியில் போர்வையைப் போல மூடி, நூற்புழுக்களை உள்ளே விடாமல் தடுக்கின்றன.
-
இவற்றால் பயிர்களில் ஏற்படும் இரசாயன மாற்றம், பயிர்களிடம் நூற்புழுக்களை அண்ட விடாமல் செய்கின்றன.
-
உயிர்க்கொல்லிச் செல்களில் சுரக்கும் திரவம், நூற்புழுக்களின் நரம்புப் பகுதியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது.
-
மேலும், நூற்புழுக்களின் முட்டைகளைத் தாக்கி அவற்றின் மீது வளர்ந்து, நூற்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கிறது.
-
பாக்டீரியா வித்துகள், நூற்புழுக்களின் உடலில் ஒட்டி வளர்வதுடன், உடலிலும் ஊடுருவி அவற்றை அழிக்கின்றன.
-
மணிச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், நூற்புழுக்களின் தாக்குதலைத் தாங்கிப் பயிர்கள் வளரும்.
-
பயிர் வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தால், நூற்புழுக்களால் ஏற்படும் மகசூல் இழப்பைச் சரி செய்யலாம்.
பயிர்களும் அளவுகளும்
காய்கறி பயிர்கள் (Vegetables)
வேர்முடிச்சு நூற்புழுவைக் கட்டுப்படுத்த, நாற்றங்காலில் ச.மீ.க்கு ஒரு கிலோ வேர் உட்பூசணம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் இட வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2.5 கிலோ சூடோமோனாசைத் தூவ வேண்டும்.
எலுமிச்சை (Lemon)
வேர் நூற்புழுவைக் கட்டுப்படுத்த, மரத்துக்கு 20 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம், நான்கு மாதத்துக்கு ஒருமுறை மரத்தைச் சுற்றி இட வேண்டும்.
திராட்சை (Grapes)
வேர்முடிச்சு நூற்புழு மற்றும் நூற்புழு, பூசணக் கூட்டு நோயைக் கட்டுப்படுத்த, கொடிக்கு 100 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கவாத்துக்குப் பின் இட வேண்டும்.
உருளைக் கிழங்கு (Potato)
முட்டைக்கூடு நூற்புழுவைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் நிலத்தில் தூவ வேண்டும்.
சூடோமோனாஸ் புளுரோசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேர் உட்பூசணம் போன்றவற்றை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தயாரித்து விற்பனை செய்கிறது.
இவற்றின் மூலம், சிக்கன முறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கலாம்.
தகவல்
முனைவர் வீ.விஜிலா,
முனைவர் மு.இராமசுப்பிரமணியன்,
முனைவர் இராஜா. இரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம் - 614 404, திருவாரூர் மாவட்டம்.
மேலும் படிக்க...
வேளாண் கடன் வேண்டுமா? 4 வங்கிகளின் சிறந்த கடன் திட்டங்கள்!
கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !
பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!