கொரோனா நெருக்கடியால் விவசாயிகள் வீடுகளில் முடங்கியதைப் பயன்படுத்திக்கொண்டு படையெடுத்த படைப்புழுக்களால் சேலத்தில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாரம்பரியமாக மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில், இந்த முறையும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்ததால், விவசாயிகள் விளைநிலைங்களுக்குச் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
2ஆயிரம் ஏக்கர் நாசம் (2 thousand acres destroyed)
இதனைப் பயன்படுத்திக்கொண்டு படையெடுத்த படைப்புழுக்கள், தங்கள் விருப்பத்திற்கு மக்காச்சோளங்களை பதம்பார்த்தன. இதன் விளைவாக தற்போது சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் வீணானது. கால்நடைகளுக்கு தீவனமாக்கூட அளிக்கமுடியாத அளவுக்கு நாசமானது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்து தங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மானியம் அறிவிப்பு (Subsidy)
இதேபோல் கோவை மாவட்டத்திலும் மக்காச்சோளத்தில் படைப்புழுத்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதைக் கருத்தில்கொண்டு, தாக்குதலைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண் துறை வேளாண் துறை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி கூறியதாவது:
மக்காச்சோளத்தில் கடந்த சில ஆண்டுகளாக படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. கோடை உழவு ஓட்டுதல், இனக்கவா்ச்சி, விளக்குப்பொறி பயன்படுத்துதல், விதை நோ்த்தி உள்பட பல்வேறு வழிகளில் இவற்றைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுவை கட்டுப்படுத்த தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. பின்னேற்பு மானியம் என்பதால் விவசாயிகள் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திய செலவுக்கான ரசீதைக் கொண்டுவந்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம். மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்."
மேலும் படிக்க...
தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!
விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை -அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!
உயர் மதிப்பு காடுகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ள TNAU!