திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப் பேட்டையில், தொழிலாளர் பற்றாக்குறை உட்பட காரணங்களால், நடப்பு சீசனில், தென்னை சாகுபடிக்கான கன்று நடவு, நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்னையே பிரதானம் (Coconut is the main)
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இரு வட்டாரங்களிலும், தென்னை சாகுபடி பிரதானமாகவும், மக்காச்சோளம், தானியங்கள், காய்கறி சாகுபடி, சீசன்தோறும் சாகுபடியாகிறது.
தொழிலாளர் தேவை அதிகம் (Labour demand is high)
இதில், சீசன் சாகுபடிகளுக்கு, தொழிலாளர் தேவை அதிகமாக உள்ளது. காய்கறி சாகுபடியில், குறிப்பிட்ட இடைவெளியில், களைப் பறித்தல், அறுவடை செய்தல் உட்பட பணிகளுக்கு, தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
தொழிலாளர் பற்றாக்குறை (Labour shortage)
ஆனால், பல்வேறு காரணங்களால், அனைத்து கிராமங்களிலும், விவசாய சாகுபடிக்கான தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
தென்னை நடவு (Coconut planting)
தென்மேற்கு பருவமழை சீசனையொட்டி, இரு வட்டாரங்களிலும், தற்போது, புதிதாக நுாற்றுக்கணக்கான ஏக்கரில், தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் நாற்றுப்பண்ணைகளில், இருந்து தென்னங்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்கின்றனர்.
தொழிலாளர் தேவை (Labour is needed)
விவசாயிகள் கூறுகையில், தென்னை சாகுபடியில், சொட்டு நீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களால், தொழிலாளர் தேவை குறைவாகவே உள்ளது. பிற சாகுபடியில், குறித்த நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல், பாதிப்பு ஏற்படுகிறது. அதேநேரத்தில், தற்போது, தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், பிற மாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
மானியம் (Subsidy)
தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், சாகுபடியை ஊக்குவிக்க, இளம்தென்னை வளர்ப்பு மானியம் வழங்கப்பட்டு வந்தது. மானியம் பெற, அரசு அங்கீகாரம் பெற்ற நாற்றுப்பண்ணையில் இருந்து தென்னங்கன்றுகள் வாங்கி, அதற்கான ரசீது வைத்திருக்க வேண்டும்.
வாரியத்திற்கு பரிந்துரை (Recommendation to the Board)
வேளாண்துறையினர் ஆய்வு செய்தும், தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் வாயிலாகவும், மானியத்துக்கு, தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு பரிந்துரைப்பார்கள்.
இதில், 2.45 ஏக்கருக்கு, இரண்டாண்டுகளுக்கு, 6,500 ரூபாய் வரை மானியம் கிடைத்து வந்தது.
கோரிக்கை (Request)
தற்போது, இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு மானியம் கிடைப்பதில்லை. வேளாண்துறையினர், தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக இம்மானியத்தை பெற்றுத்தரவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!