பூச்சி தாக்குதல் மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தினால் பல்வேறு காய்கறி மற்றும் பழங்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு ஜீலை மாதம் தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
காய்கறிப் பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பின்வருமாறு-
கத்தரி:
கத்தரி பயிர்களில் ஏற்படும் குருத்து மற்றும் காய் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த தாக்குதலின் ஆரம்ப நிலையில் வேப்ப விதைச்சாறு 5 சதம் அல்லது அசாடிராக்டின் 1 சதம் 5 மிலி/லிட்டர் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5% 4 கிராம் / 10 லிட்டர் அல்லது தயேடிகார்ப் 75% 20 கிராம் / 10 லிட்டர் அல்லது புழுபென்டியமைடு 20 WDG 7.5 / 10 லிட்டர் கிராம் தெளிக்க வேண்டும்.
தக்காளி:
தக்காளி பயிர்களில் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்ப விதைச்சாறு 5 சதம் அல்லது அசாடிராக்டின் 1% ஈசி 5 மிலி/லிட்டர் அல்லது புழுபென்டியமைடு 39.35 SC 2 மிலி/10 லிட்டர் அல்லது குளோரான்ட்ரானிலிபுரோல் 18.5 SC 3 மிலி/10 லிட்டர் தெளிக்க வேண்டும்.
மிளகாய்:
மிளகாய் பயிர்களில் ஏற்படும் வெள்ளை ஈ மற்றும் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த பிப்ரோனில் 5% எஸ்சி 1.5 2 மிலி / லிட்டர் அல்லது இமாமெக்டின பென்சோயேட் 5% SG 4 கிராம் /10 லிட்டர் பரிந்துரைக்கப்படுகிறது. இலைச்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த பென்சாகுயின் 10% இசி 2 மிலி/லிட்டர் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5% SG 4 கிராம/10 லிட்டர் பரிந்துரைக்கப்படுகிறது.
தக்காளி மற்றும் மிளகாய் - இலைசுருட்டை வைரஸ்:
தக்காளி மற்றும் மிளகாய் பயிர்களில் இலைசுருட்டை வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வயலில் மஞ்சள் ஒட்டும் பொறிகளை 12 எண்ணிக்கை / ஹெக்டேர் என்ற அளவில் நிறுவவும், மேலும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, டைமெத்தோயேட் 30 இசி @ 1மி/லி அல்லது மெத்தில் டெமெட்டன் 25 இசி @ 1மி/லி அல்லது தயோமெதாக்சாம் 25 டபிள்யுஜி WG 1கி/3லி தெளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
வெண்டை:
வெண்டை பயிர்களில் ஏற்படும் வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சியின் பாதிப்பை கட்டுப்படுத்த தயாமீத்தாக்சாம் 25% WG 1 கிராம்/10 லிட்டர் பரிந்துரைக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட வகையில் மருந்துகளை தெளிப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து காய்கறி பயிர்களை பாதுகாக்க இயலும் என தெரிவித்துள்ள ஆட்சியர், மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்புக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் காண்க:
வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெற இதை செய்யுங்கள்- விருதுநகர் மாவட்ட ஆட்சியர்