Horticulture

Sunday, 07 February 2021 01:07 PM , by: Daisy Rose Mary

Credit : Dinamalar

பாக்கு மரம் ஒரு மலைத்தோட்டப் பயிரியாகும். நமது தமிழ்நாட்டில் கோவை, சேலம், ஈரோடு, தேனீ மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் பயிரிடப் பட்டு வருகிறது. இந்த பாக்கு மரமானது அரிகா கேட்டச்சு என்ற தாவரவியல் பெயரிலும் மற்றும் பால்மே என்ற குடும்பத்தின் மூலமாக அழைக்கப்படுகிறது. இந்த பாக்கு மரம் தென்னை, காபி மரத்திற்கு இடையில் ஊடு பயிராக பயிரிடப் படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் பாக்கு சர்வதேச சந்தையில் மதிப்பு மிக்கது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பாக்கு மரத்தைப் பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். மண் நல்ல வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில்  சாகுபடி செய்யலாம். வேரின் அதிக வளர்ச்சிக்கு 750 முதல் 4500 மி.மீ மழையளவு இருத்தல் வேண்டும். இப்பயிர் நன்கு வளர்வதற்கு குறைந்தபட்சம் 4o செ. முதல் 40o செ. தட்பவெப்பநிலை அவசியம்.

இரகங்கள்

மங்களா, சுபமங்களா, சுமங்களா, மோஹித்நகர்‚ மற்றும் ‚மங்களா, சும்ருதி (அந்தமான்). ஹயர்ஹல்லி குட்டை இரகம், வி.டி.எல்.ஏ.ஹச் - 1, 2 and தீர்த்தஹல்லி குட்டை இரகம்.

பருவம் : ஜுன் - டிசம்பர்

விதையும் விதைப்பும்

குறியீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்ட நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்கவேண்டும். விதைகளை 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றாங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவேண்டும். விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுக்களைப் பிடுங்கி 30 x 50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும். பிறகு நாற்றுக்களை நிழலில் வைத்து 12-18 மாதங்கள் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்ட நாற்றுக்களை 30 செ.மீ இடைவெளியில் இரண்டாம் நாற்றாங்காலில் நடவு செய்து வளர்க்கவேண்டும். அவ்வப்போது நாற்றுகளுக்கு தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நடவு செய்தல்

அடர்த்தியான உயரம் குறைவான மற்றும் இலைகள் அதிகமுள்ள நாற்றுக்களைத் தேர்வு செய்யவேண்டும். நாற்றுக்கள் குறைந்தது ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடையவையாக இருத்தல்வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாற்றுக்களை 90 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும். குழிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 27.5 செ.மீ இருத்தல்வேண்டும். நாற்றுக்களின் முக்கால் பாகம் நீளத்திற்கு மண் அணைக்கவேண்டும். பாக்கு மரம் நன்கு வளர தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நீர்ப்பாசனம்

நவம்பர் – பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், மார்ச் - மே மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
வாய்க்கால் நீர்ப்பாசனம் – 175 லி/மரம்/நாள்.
சொட்டு நீர்ப்பாசனம் - 16 – 20 லி/மரம்/ நாள்.

உரமிடுதல் 

மரம் ஒன்றுக்கு (5 வயதும் அதற்கு மேலும்) தொழு உரம் 10 முதல் 15 கிலோ, 100 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். ஐந்து வயதுக்கு குறைவான மரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும்.

களைக்கட்டுப்பாடு & பின்செய்நேர்த்தி

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மண்வெட்டி கொண்டு கொத்தி களை நீக்கம் செய்யவேண்டும்.

Credit : Boldsky

பயிர் பாதுகாப்பு

சிலந்திப்பூச்சி

இதனைக் கட்டுப்படுத்த டைகோபால் 18 இசி மருந்தை லிட்டர் நீருக்கு 2.5 மில்லி கலந்து தெளிக்கவேண்டும்.

ஸ்பின்டில் வண்டு

மிதைல் பாரதியான் 1.3 D மருந்தை லிட்டருக்கு 2.5 கிராம் (அ) டைமிதோயேட் லிட்டருக்கு 1.5 மி.லி. தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

பாளைப்புழுக்கள்

இதனை கட்டுப்படுத்த மிதைல் பாரதியான் 20 EC 2 மிலி (அ) WP 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

நூற்புழு

சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் மற்றும் பேசிலஸ் சப்டிலிஸை மண்ணில் இடுவதன் மூலம் வேர்மூடிச்சு நூற்புழு மற்றும் அவரை விதை வடிவ நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்.

நோய்கள்

காய் அழுகல் அல்லது மாகாளி நோய் 

நோய் தாக்கப்பட்ட பகுதியை நீக்கிவட்டு அந்த இடத்தில் 10 சதவீதம் போர்டோக் கலவையை தடவிவிடவேண்டும்.

அடித்தண்டு அழுகல்

கடுமையாக தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்துவிடவேண்டும்.வேப்பம் பிண்ணாக்கு 2 கிலோ/மரம்/வருடம் மண்ணில் இடுவதை தொடர்ந்து 1.5 % டிரைடிமார்ஃப்யை 125 மி.லி. மூன்று மாத இடைவெளியில் வேர் மூலம் செலுத்த வேண்டும். 1% போர்டாக்ஸ் கலவையை மண்ணில் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் இலை நோய்

சரிவிகித சத்துகளுடன் சூப்பர் பாஸ்பேட்டை கூடுதல் அளவு இடவும். சுண்ணாம்பு - 1 கிலோ/மரம்/வருடம் பயன்படுத்தவும். அங்கக உரங்கள் – 12 கிலோ/மரம்/வருடம் பயன்படுத்தவும்.

இலைப்புள்ளி நோய்

1% போர்டாக்ஸ் கலவை (அ) 0.2% டைதேன் M 45 யை இலைவழியாக தெளிக்கவும்.

பாக்கு விரிசல் நோய்

2 கிராம் போராக்ஸ்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

அறுவடை

நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஒரு வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.

மகசூல்

பாக்கு மரங்கள் எக்டேருக்கு 1250 கிலோ வரை காய்க்கும். இதற்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால், இந்த மரங்களை வளர்த்து பராமரிப்பதன் மூலம் அதிக லாபம் பார்க்கலாம்.


கா. அருண்குமார், ஆராய்ச்சி மாணவர்

வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, 641003.

க. வெங்கடேசன், பேராசிரியர் மற்றும் தலைவர்

வாசனை மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை,தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை, 641003.

மேலும் படிக்க...

100% உத்தரவாதம் அளிக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு - நடமாடும் பண வங்கி!!

காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)