தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து ரூ.1000 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு நில ஒதுக்கீட்டு ஆணையை தொழில் நிறுவனத்திற்கு வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு மாநிலமானது பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருவதுடன் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்தும் வகையிலும், தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாட்டின் இல்லக்கினை அடையும் வகையிலும் இந்த அரசு முன்னெடுப்புகளை எடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்த நிலையில் அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இயங்கி வருகிறது.
இதனிடையே தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்தாண்டு (07.04.2022) அன்று தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டதை தொடர்ந்து ஏப்ரல் 3 ஆம் தேதி (03.04.2023) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டி.ஒய்.சங்க் (T.Y. Chang) அவர்களிடம் கையகப்படுத்தப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இதற்காக 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டிற்காகவும் இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் நிலை 1-ல் கொள்கை அளவில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இத்தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பணி வாய்ப்பின் மூலம் 17,350 பேர் நேரடியாகவும் மற்றும் 2,650 பேர் மறைமுகமாகவும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, இ.ஆ.ப, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
உள்ளங்கை மஞ்சளா இருக்கு, பாதம் வேற வலிக்குதே.. ஒருவேளை இருக்குமோ?