1. செய்திகள்

எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Coal extraction issue- CM MK stalin letter to Prime Minister modi

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சனையை பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2005, கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆகியவற்றின் கீழ் 17 வது / 7 வது பாகம் ஏலத்தை ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் 29 மார்ச் 2023 அன்று அறிவித்துள்ளது என்றும், நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும். இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன, அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு 4 (1) இன் படி, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது" என்று வகுக்கப்ட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் "நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்" ஆகியவை அடங்கும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 இன் தடைக்குள் அடங்கும்.

ஆகவே இந்த ஏல அறிவிப்பு செயல்முறைப்பட்டு, வெற்றிகரமான ஏலதாரர் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதை இது குறிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட வட்டாரங்களைப் பொருத்தவரை இந்த ஏல நடைமுறை வீணான செயலாகும். அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால், இப்பிரச்னைகளை தெளிவுபடுத்துவதுடன், ஏலத்திற்கான அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்கத் வட்டாரங்கள் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தின் 7வது/17வது தவணையில் இருந்து விலக்கிட வேண்டும் என்றும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒன்றிய அரசு, மாநில அரசில் உள்ள தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் முதலலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்து தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காண்க:

நிலக்கரி எடுக்கும் முடிவு- வேளாண் அமைச்சர் முதல் விவசாயிகள் வரை அளித்த பதில் என்ன?

English Summary: Coal extraction issue- CM MK stalin letter to Prime Minister modi Published on: 04 April 2023, 05:09 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.