மதுரையில் உள்ள ஐந்து ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 170 டன் விவசாய விளைபொருட்கள் ரூ.35.97 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் சந்தைப்படுத்தல் துறை வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த ஜூன் 2- ஆம் தேதி திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நான்கு விவசாயிகளின் 72.86 டன் நெல்லினை ரூ.20,50,193-க்கு விற்பனை செய்துள்ளனர்.
அதேப்போல் மதுரை ஒழுங்குமுறை சந்தையில் e-NAM திட்டத்தின் கீழ் விவசாயி உற்பத்தி செய்த 6.24 டன் நெல்லினை, அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,87,410 வரவு வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான ஆதரவுத் திட்டத்தின் கீழ், 12 விவசாயிகளிடம் இருந்து 8.2 டன் கொப்பரையினை ரூ.8,90,520-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
e-NAM திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை சந்தைகளுக்கு எடுத்துச் சென்று லாபகரமான விலைக்கு விற்கலாம் என வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலூர், வாடிப்பட்டி பகுதி தென்னை விவசாயிகள், மேலூர், வாடிப்பட்டி ஒழுங்குமுறை சந்தைகளில் கொப்பரை விளைப்பொருட்களை ஆதரவு விலை திட்டத்தின் கீழ் விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை வட்டத்தில் மொத்தம் 170.91 டன் விளைப்பொருட்கள் ரூ. 35.97 லட்சத்திற்கு விலை போனது. விற்பனை செய்யப்பட்ட விளைப்பொருட்களின் நிலவரம் பகுதி வாரியாக பின்வருமாறு-
மதுரை : 6.24 டன் விளைப்பொருட்கள்- ரூ.1.87 லட்சத்திற்கு விற்பனை
உசிலம்பட்டி: 22.5 டன் விளைப்பொருட்கள்- ரூ.4.28 லட்சத்திற்கு விற்பனை
மேலூர்: 5.1 டன் விளைப்பொருட்கள்- ரூ.1.71 லட்சத்திற்கு விற்பனை
வாடிப்பட்டி: 52.5 டன் விளைப்பொருட்கள்- ரூ.4.72 லட்சத்திற்கு விற்பனை
திருமங்கலம்: 84.57 டன் விளைப்பொருட்கள்- ரூ.23.39 லட்சத்திற்கு விற்பனை
விவசாயிகள் சமீப காலமாக e-NAM திட்டத்தின் கீழ் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன. e-NAM என்கிற தேசிய விவசாய சந்தை திட்டமானது 2016 இல் தொடங்கப்பட்டது.
e-NAM என்பது இந்தியா முழுவதும் விவசாய சந்தைகளை ஒருங்கிணைக்கும் மின்னணு வர்த்தக போர்டல் ஆகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைனில் விற்கவும், சந்தைக்கான உரிய விலைகளைக் கண்டறியவும், நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுடன் தொடர்பு கொள்ளவும் இது உதவுகிறது.
இந்த டிஜிட்டல் தளம் விவசாய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தரகர்களை ஒழித்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, விவசாயிகளுக்கு நியாயமான சந்தை அணுகலை வழங்குவதால் இத்திட்டம் விவசாயிகள் மத்தியில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!