மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.இதில், அரசு விடுத்த எச்சரிக்கையையும், மீறி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கியப் போராட்டத்தில், பேருந்துக்கழக ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளதால், பெரும்பாலான இடங்களில் பேருந்து ஓடவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி,எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.
நாடு முழுவதும் சுமார் 20 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது, வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பத்திற்கு மாதம் ரூ.7500, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
வங்கிகள், மின்சாரம், காப்பீடு, நிலக்கரி, ஸ்டீல், தொலைத்தொடர்பு, தபால், எண்ணெய், வருமான வரித்துறை என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த ’பாரத் பந்த்’ தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.
அரசு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் திமுக. மற்றும் கூட்டணி கட்சிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் எச்சரிக்கையை மீறி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை, குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தலைநகர் சென்னையில் வெகு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
சனி, ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்று திரும்பிய ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேட்டில் பேருந்து கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்படுவதால் ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் படிக்க...