நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில், 2 லட்சம் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS), பால் பண்ணை மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களை அமைக்க, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
”நபார்டு(NABARD), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஆகியவற்றின் ஆதரவுடன் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கிராம அளவில் கடன் வசதிகள் மற்றும் பிற சேவைகளைப் பெறவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
தற்போது, 130 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட 98,995 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நாட்டில் உள்ளன. குறுகிய கால மற்றும் நடுத்தர கால கடன் மற்றும் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விநியோகம் போன்ற பிற உள்ளீட்டு சேவைகளை வழங்குகிறது. இவை நபார்டு வங்கியின் உதவியுடன் 352 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) மற்றும் 34 மாநில கூட்டுறவு வங்கிகள் (StCBs) மூலம் மறுநிதியளிப்பு செய்யப்படுகிறது.
அதேப்போல் சுமார் 15 மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய 1,99,182 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல், பால் பரிசோதனை வசதிகள், கால்நடை தீவன விற்பனை, தொடர்பான சேவைகளை இச்சங்கங்கள் வழங்குகின்றன.
25,297 தொடக்க மீன்பிடி கூட்டுறவு சங்கங்களில் சுமார் 3.8 மில்லியன் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். சந்தைப்படுத்தல் வசதிகளை எளிமையாக்கவும், மீன்பிடி உபகரணங்கள், மீன்களுக்கான தீவனங்களை வாங்க இச்சங்கங்கள் உதவுகின்றன. மேலும் வரையறுக்கப்பட்ட மீனவ சங்க பிரதிநிதிகளிக்கு கடன் வசதிகளை வழங்குகின்றன.
இவற்றினை தவிர்த்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இல்லாத 1,60,000 பஞ்சாயத்துகளும், பால் கூட்டுறவு சங்கம் இல்லாத கிட்டத்தட்ட 2,00,000 பஞ்சாயத்துகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன.
அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கூட்டுறவுச் சங்கங்கள் இன்றி செயல்படும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சாத்தியமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS) நிறுவவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , இதைப்போல் பால் கூட்டுறவு சங்கங்கள் , மீன்வள கூட்டுறவு சங்களையும் அனைத்து விதமான கிராமம் மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :
TNAU சாா்பில் அறிமுகம் செய்யப்பட்ட 23 வகையான பயிா் ரகங்கள் என்ன?