நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 22 விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதில், வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ.1,975-ஆக உயர்ந்திருக்கிறது.
-
இதேபோல், கடுகின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குவிண்டால் கடுகின் விலை ரூ.4,650-ஆக அதிகரித்துள்ளது.
-
தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225-ம், பயறு வகைகள் குவிண்டாலுக்கு ரூ.300-ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, அவற்றின் விலை ஒரு குவிண்டாலுக்க ரூ.5,100-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவிட்-19 தொற்று காரணமாக சாதகமற்ற சூழ்நிலையிலும், 2019-20ம் ஆண்டில் சாதனை அளவாக 296.65 மில்லியன் டன்கள் உணவு தானியம் உற்பத்தி செய்து விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியும் முறையே 23.15 மற்றும் 33.42 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி உற்பத்தி 354.91 லட்சம் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும். இந்திய வேளாண் வரலாற்றில் இந்தாண்டு ஒரு மைல்கல். செப்டம்பர் வரையிலான இந்தாண்டு காரிப் பருவத்தில் 1,113 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 46 லட்சம் ஹெக்டேர் அதிகம். நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் இது நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்த மகத்தான சாதனைக்காக விவசாயிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் பாராட்டுக்கள் என மத்திய அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
மேலும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், முடக்க காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.53,267 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மற்றும் கேரளாவில் உள்ள மாவட்டங்களில் ஏலக்காய் உற்பத்தி 2018-2019 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் குறைந்துள்ளது.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு, பயிர் உற்பத்தியை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தியை மேம்படுத்துதல், திறமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைப்பது, விவசாயிகள் பெறும் விலையை அதிகரிப்பது, பண்ணை சாரா முறைகளுக்கு மாறுவது உட்பட 7 யுக்திகளை பரிந்துரைத்தது.
மேலும் படிக்க....
மாடு வளர்க்க மலைப்பாக இருக்கா- சற்று மாற்றி யோசிங்க!
அம்மை நோயில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? இயற்கை முறை மருத்துவம்!