கேரளாவின் கொச்சியில் உள்ள களமசேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனைக் கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார் மற்றும் 23 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
களமசேரி சிஐ விபின் தாஸ் கூறுகையில், காலை 9 மணியளவில் முதல் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதன்பிறகு அடுத்த ஒரு மணி நேரத்தில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும் செய்தி நிறுவனம் ஏஎன்ஐ யிடம் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு நடந்தபோது 2,000 க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். நாங்கள் இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும்’’ என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்துளார். ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களமசேரி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குனருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
“மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். களமசேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் மருத்துவ வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றும் கேரள சுகாதார அமைச்சர் கூறினார்.
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புக்கு இடையே போர் நடைப்பெற்று வரும் சூழ்நிலையில் இச்சம்பவம் மேலும் பொது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.கேரள மாநிலம் களமசேரி குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடைப்பெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடுகாணி, எருமாடு, கனநல்லா உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் காண்க:
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? TNSTC சூப்பர் அறிவிப்பு
Heavy rain alert: 6 மாவட்டங்களுக்கு RMC chennai கனமழை எச்சரிக்கை