PM kisan திட்டத்தில் e-KYC பதிவு மேற்கொள்ளாதவர்களும், பதிவை புதுப்பிக்காதவர்களும் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் வைத்துள்ளார்.
PM kisan திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியைப் பொறுத்து 13 தவணைகள் வரை வரப்பெற்றுள்ளது.
மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே e-KYC என்றழைக்கப்படுகிறது. PM kisan திட்டத்தில் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 14-வது தவணையைப் பெற தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். கீழ்க்காணும் மூன்று வழிமுறைகளில் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு அல்லது அப்டேட் செய்யலாம். அவற்றின் விவரம் பின்வருமாறு:
முதல் வழிமுறை:
தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) மூலம் சரி பார்த்திடலாம்.
இரண்டாம் வழிமுறை:
ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் PM kisan திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்க்கலாம்.
மூன்றாம் வழிமுறை:
பி.எம்.கிசான் செயலி மூலமாக தங்களது முக அடையாளம் கொண்டோ அல்லது அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கிளையை (தபால் நிலையம்) அணுகியோ e-KYC மேற்கொள்ள வேண்டும்.
கோவையில் எத்தனை பேர்?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 63,353 பயனாளிகளில் இதுவரை 61,893 பயனாளிகள் மட்டுமே நில ஆவணம் இணைப்பு (Land seeding) செய்துள்ளனர்.
இதில் 56,265 பயனாளிகள் மட்டுமே வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்துள்ளனர். 51,521 பயனாளிகள் மட்டுமே நில ஆவணம் இணைப்பு, e-KYC மற்றும் ஆதார் எண் இணைப்பு ஆகிய பணிகளை முடித்துள்ளனர். இவர்களால் மட்டுமே தற்போது விடுவிக்கப்பட உள்ள 14 வது தவணை தொகையை பெற இயலும்.
PM kisan திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளில் நில ஆவணம் இணைப்பு, e-KYC மற்றும் ஆதார் எண் இணைக்கப் பெறாத 7088 விவசாயிகளின் விவரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி குறைகளை நிவர்த்தி செய்து இத்திட்டத்தில் பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க: