புதுக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் எஸ்.சி - எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35 % மானியம் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது என்று தகவல்.
படித்த, சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள, முதல் தலைமுறைத் தொழில்முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத் தொகை ரூ.10.00 இலட்சத்துக்கு மேலும் ரூ.500.00 இலட்சத்தை மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது.
தொகையில் 25%, பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75.இலட்சம். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனுற குறைந்த பட்சம் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21-க்கு குறையாதிருக்க வேண்டும். உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் மட்டுமன்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். முதலீட்டாளர் பங்கு பொதுப் பிரிவினருக்கு திட்டத் தொகையில் 10% சிறப்புப் பிரிவினர் 5% செலுத்திடல் வேண்டும்.
முன்னர்,இத்திட்டத்தின் கீழ் சேவைப் பிரிவில், மண் அள்ளும் இயந்திரங்கள், காங்கிரீட் மிக்சர் வாகனம், ரிக் போரிங் வாகனம், ரெப்ரிஜரேட்டட் ட்ரக் போன்ற நகரும் அலகுகளுக்கு மட்டுமே இது வரை ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது.
திட்டச் செயல்பாடு பற்றிய சீராய்வின் போது, இத்திட்டத்தின் கீழ் பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தோர் பெருமளவு பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, மேற்குறித்த பிரிவுகளைச் சார்ந்த பயனாளிகள் பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதான தொழில் திட்டங்களை அனுமதிக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டு அவ்வாறே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், ட்ரைலெர் போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35% தனிநபர் மானியமும் கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3% வட்டி மானியமும் பெற்றுப் பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தினை நேரடியாகவோ அல்லது 04322-221794, 9840961739 மற்றும் 9487173397 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பயனாளர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகவும்.
மேலும் படிக்க
வெறும் ரூ. 30,000க்கு எலெக்ட்ரிக் பைக்குகள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் அறிவிப்பு!