அசாம் மாநிலத்தில் ஆயில் டேங்கர் லாரியில் மறைமுகமாக கடத்தப்பட்ட 40 மாடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மாடுகளை கடத்தும் செயல் சமீப காலமாக அசாம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று கம்ரூப் (எம்) மாவட்டத்திற்கு உட்பட்ட சோனாபூரில் ஒரு பெரிய மாடு கடத்தல் முயற்சியை அசாம் காவல்துறை முறியடித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, AS 05 C1655 என்ற பதிவு எண் கொண்ட எண்ணெய் டேங்கர் லாரியினை காவலர்கள் மறித்து சோதனையிட்டனர். சமீபத்தில் வெற்றி பெற்ற புஷ்பா பட பாணியில் டேங்கர் லாரிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 மாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன. இது தொடர்பாக, குல்சார் உசேன் மற்றும் பைசுல் அலி என்ற இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுத்தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்த 40 மாடுகளும் தேமாஜியில் இருந்து மேகாலயாவுக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்துள்ளது.
பிஹாலி பகுதியில் 32 மாடுகள் மீட்பு:
மேற்குறிப்பிட்ட சம்பவத்தைப் போன்றே சமீபத்தில் பல மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்ட ஐந்து வாகனங்களை பிஹாலி காவல்துறையினர் பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 மர்ம நபர்களை கைது செய்த போலீசார், வண்டியில் அடைக்கப்பட்டிருந்த 32 மாடுகளை மீட்டனர்.
பிஹாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புரோய்காட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 5 வாகனங்களில் மொத்தம் 32 மாடுகளை ஏற்றிச் செல்ல முயன்ற போது, போலீஸார் நடத்திய சோதனையில் வாகனங்கள் பிடிபட்டன. அடைப்பட்டிருந்த மாடுகள் கூட்டத்தில் மாடு ஒன்று இறந்து கிடந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோனலில் இருந்து பாக்மாரிக்கு மாடுகள் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாடுகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட பொலிரோ பிக்கப் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களின் பதிவு எண்கள் முறையே AS O7 BC 4311, AS 22 C 9361, AS 07 BC 7020 மற்றும் AS 22 C 9042. ஒரு வாகனத்தில் பதிவு பலகை எண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களில் மட்டும் பிஹாலி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பசுக்கள் மீட்கப்பட்டதோடு, அவற்றை ஏற்றிச் சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பல வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், கடத்தலில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும், கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருவது அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண்க:
2G போனை தூக்கிப்போடுங்க- ரூ.999-க்கு வந்தாச்சு 4G Jio Bharat Phone