1. செய்திகள்

86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனைகள்- பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Agriculture shadow finance report on behalf of PMK

தமிழ்நாடு அரசின் சார்பில் நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவற்றின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாமக சார்பில் தமிழக அரசுக்கு முன்வைக்கும் (2023 – 2024) ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-

  1. 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
  2. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
  3. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும்.
  4. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.22,000 கோடி செலவிடப்படும்.

பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டு:

  1. 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு கடந்த காலத்தில் இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 2023-24ஆம் ஆண்டு தமிழ்நாடு இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
  2. கடந்த 60 ஆண்டுகளில் பாசனக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 9.03 லட்சம் ஹெக்டேரில் இருந்து 6.22 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. ஏரி, குளங்கள் மூலமான பாசனப் பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரில் இருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது.
  3. பாசனப் பரப்பு குறைந்ததன் காரணமாக, 1970-71ஆம் ஆண்டில் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு, 2018-19 ஆம் ஆண்டில் 45.82 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.
  4. தமிழ்நாடு கடந்த காலங்களில் இழந்த 5.72 லட்சம் ஹெக்டேர் பாசனப் பரப்பில், குறைந்தது 3 லட்சம் ஹெக்டேர், அதாவது 7.5 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  5. வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.
  6. தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,504 இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400 ஆக உயர்த்தப்படும்.
  7. ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
  8. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் சுமார் 33% மட்டுமே தற்போது அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை படிப்படியாக 80 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  9. 2021-22 ஆம் ஆண்டில் 43 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 72 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
  10. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,700 விலை வழங்கப்படும்.
  11. 2023-24 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்படும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வேளாண் விலை பொருள் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்கள் கரும்பு வழங்கமுடியும். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட 30 நாட்களில் கொள்முதல் வாரியம் மூலமாகவே உழவர்களின் வங்கிக் கணக்கில் கொள்முதல் விலை வரவு வைக்கப்படும்.
  12. கொள்முதல் நிலையங்களில் வெளிமாநிலத்தவர்கள் நெல் விற்பனை செய்வதையும், முறைகேடுகளையும் தடுக்கும் நோக்குடன் உழவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.

250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள்:

  1. வேளாண் தொழிலில் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப் படுத்துதல் ஆகிய 3 துறை சார்ந்த 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
  2. சிறப்பாக செயல்படும் வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்.
  3. மிகச் சிறப்பாக செயல்படும் 205 புத்தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் அரசின் சார்பில் ரூ.1 கோடி வரை முதலீடு.
  4. மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 23.04 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. தமிழ்நாட்டில் சிறு-குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.
  6. தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.

என்.எல்.சி. சுரங்கம்- வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது:

  1. தமிழ்நாட்டில் எந்தத் தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது.
  2. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது. இதுதொடர்பான என்.எல்.சி.யின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காது.
  3. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசே நிர்ணயிக்கும்.
  4. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
  5. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

சிறுதானிய விற்பனை நிலையங்கள் - உணவகங்கள்:

  1. உழவர்கள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
  2. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.
  3. 2023ஆம் ஆண்டு பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அமைப்பால் அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆண்டு முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், சிறுதானிய உணவுத் திருவிழாக்களை தமிழக அரசு நடத்தும்.
  4. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும். அவற்றில் சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும்.

மாநில வேளாண் கொள்கை, எத்தனால் கொள்கை:

  1. தமிழ்நாட்டை வேளாண்மையை சிறந்த மாநிலமாக மாற்றும் நோக்குடன் தமிழ்நாடு மாநில வேளாண் கொள்கை உருவாக்கப்படும். அதற்காக வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும்.
  2. வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் ஓர் அங்கமாக எத்தனால் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. தமிழ்நாட்டில் பெட்ரோலுடன் 20% எத்தனால் சேர்க்கப்படும்; எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இது 30%ஆக உயர்த்தப்படும்.

வெள்ள பாதிப்பு - ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு:

  1. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையிலும், அதற்குப் பிறகு பருவம் தவறி பெய்த மழையிலும் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
  2. இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிரந்தர தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  3. இத்திட்டத்தின்படி, கரும்புக்கு ரூ.1.2 லட்சம், நிலக்கடலைக்கு ரூ.33,000, பிற பணப் பயிர்களுக்கு ரூ.1.25 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
  4. இயற்கை சீற்றத்தால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடுகட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசே நேரடியாக செயல்படுத்தும்.
  5. பயிர்க்காப்பீட்டுக்கான பிரீமியத்தில் 2% மட்டும் உழவர்கள் செலுத்தினால் போதுமானது. மீதத் தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சரிபாதியாக பகிர்ந்து செலுத்தும்.

தோட்டக்கலை பரப்பை அதிகரிக்க சிறப்புத் திட்டம்:

  1. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.
  2. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மை தவிர்த்த பிற தொழில் திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.

நொய்யல் ஆறு மீட்புத் திட்டம்:

  1. கொங்கு மண்டலத்தை வளம் கொழிக்கச் செய்த நொய்யல் ஆற்றை மாசு மற்றும் கழிவுகள் கலப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  2. நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் மொத்தம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும். 2023-24ல் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.   

அரியலூர் சோழர் பாசனத் திட்டம்: ஆய்வு செய்ய குழு

  1. அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளில் 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவு கொண்ட ஏரிகளை மீட்டெடுப்பதற்காக, அரியலூர் சோழர் பாசனத் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும்.
  2. அரியலூர் சோழர் பாசனத் திட்டம் சாத்தியமானது என்றால், அதற்கான பணிகள் 2023 - 24 ஆம் நிதி ஆண்டிலேயே தொடங்கும். அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் - ஜூலை மாதம் அடிக்கல்:

  1. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்கான, தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  2. இத்திட்டத்திற்காக ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு வரும் ஜூலை மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும்.
  3. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்றாலும் கூட, அத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இத்திட்டம் குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த 4 முறை நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் வெற்றிபெறவில்லை.
  4. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும் படி மத்திய அரசை தமிழக அரச வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.

அத்திக்கடவு - அவினாசித் திட்டம்: மார்ச் மாதம் திறப்பு

  1. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பாசன, குடிநீர்த் தேவைக்கான அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளில் பிப்ரவரி 20ஆம் தேதி வரை 100% நிறைவடைந்துவிட்டன.
  2. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் சோதனை ஓட்டம் அடுத்த சில நாட்களில் மேற்கொள்ளப்படும். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்ட பிறகு மார்ச் இரண்டாவது வாரத்தில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
  3. நாகை மாவட்டம் குமாரமங்கலம் - கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1,064 மீட்டர் நீளத்திற்கும், 28 மீட்டர் அகலத்திற்கும் தடுப்பணை கட்டும் பணிகளில் 90% நிறைவடைந்துவிட்டது.
  4. மீதமுள்ள பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, வரும் ஜூலை மாதத்தில் கொள்ளிடம் தடுப்பணை திறக்கப்படும்.

காவிரி - குண்டாறு இணைப்பு: வழக்கை மீறி பணிகள் தொடரும்

  1. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியைப் போக்குவதற்கான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  2. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் காவிரி - குண்டாறு இணைப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
  3. தமிழ்நாட்டில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணற்குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
  4. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் எம்-சாண்ட் ஆலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தேவைகளுக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

பனை மரங்கள் மூலம் ஏக்கருக்கு ரூ.16 இலட்சம் வருவாய் - சிறப்புத் திட்டம்

  1. தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை தமிழக அரசே அதன் சொந்த செலவில் அகற்றித்தரும். காலி நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  2. ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.5,000 கோடி மறுமுதலீடு

  1. வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்."
  2. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது. மாறாக, 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் பெறும் விவசாயி, ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.
  3. 2023-24ஆம் ஆண்டில் ரூ.16,000 கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும்.

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி:

  1. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.11,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 3 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

தோட்டக்கலை பல்கலைக் கழகம்:

  1. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.
  2. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
  3. தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

வேளாண் கல்வி - 3 புதிய பல்கலைக் கழகங்கள்:

  1. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி:

  1. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.
  2. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.
  3. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்:

  1. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
  2. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
  3. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
  4. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்:

  1. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
  2. வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  3. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்:

  1. தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
  2. இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  3. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
  4. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.
  5. வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.

நீர்ப்பாசனத் திட்டம்:

  1. 2023-24ஆம் ஆண்டு முதல் 2028-29 வரை நீர்ப்பாசன ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  2. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
  3. தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  4. தென்பெண்ணை - துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2 புதிய அமைச்சகங்கள்:

  1. வேளாண் துறை 3ஆக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
  2. வேளாண்மை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் முதலமைச்சர் தலைமையில் வேளாண் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும். இதில் வேளாண்மை சார்ந்த 7 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.
  3. வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்பின் தலைமைக் குழு அன்றாடம் அந்த வட்டத்தில் அறுவடையாகும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும். அந்த கூட்டமைப்பு மூலமாகவே விற்பனைகள் செயல்படுத்தப்படும்.
  4. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இலவச பேருந்து வசதி:

  1. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.
  2. உழவர்கள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.
  3. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
  4. நாட்டுக் கோழிகள், ஆடுகள், வான் கோழிகள் போன்றவை கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு பட்டதாரி இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பங்களிப்புடன் முக்கிய நகரங்கள், சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒரே இடத்தில் அனைத்தும் சமைக்கப்பட்டு கூட்டுறவு முறை உணவகங்களுக்கு ஒரே ருசியில் வழங்கப்படும்.
  1. சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.
  2. புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்
  3. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். உழவர்கள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  4. உழவர்களின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்:

 100.உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல், நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்னைத் திட்டத்தின் (Precision Forming) மூலம் வருவாயை பெருக்குதல், உழவர்களுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்:

101.விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.

102.வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில்வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.

தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை:

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை (Sustainable Agriculture) செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

உணவு தன்னிறைவு:

உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.

ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை (Special Agro- Economic Zones) அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்.

வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 86 தலைப்புகளில் 307 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும் என பாமகவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் - வி.கே.பால்

English Summary: Agriculture shadow finance report on behalf of PMK Published on: 26 February 2023, 11:48 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.