தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்டாவில் 5,36,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் இன்று தாக்கல் செய்ய தொடங்கியுள்ளார். பச்சை துண்டு அணிந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்ஜெட் ஏன் தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது என்பதற்கு அமைச்சர் விளக்கம் அளித்தார். கடந்தாண்டில் வேளாண் துறையில் செய்த சாதனைகள் மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ள புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த தகவலை வெளியிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வேளாண் துறையில் அதிக மகசூல் பெறப்பட்டுள்ளது. தூர் வாருதல், மழைப்பொழிவால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்டாவில் 5,36,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக 1,50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. சந்தனம் உள்ளிட்ட 77 லட்சம் உயர் ரக மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய பயிர் ரகங்களை உருவாக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரலாறு காணாத வகையில் நேரடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் நடப்பாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். பட்ஜெட் உரையின் போது, மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- தங்க சம்பா சாப்பிட்டா தங்கமா இருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட சட்டப்பேரவை சிரிப்பலை ஏற்பட்டது.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவை நடவடிக்கைகள் நிறைவடையும். நாளை புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 23 ஆம் தேதி மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதன்பின் பட்ஜெட் மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைந்தப்பின் நிதியமைச்சர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
உழவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? தொடங்கியது வேளாண் பட்ஜெட் தாக்கல்
பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டம் - 7 மாவட்ட விவசாயிகளுக்கு ஜாக்பாட்