தனிநபராக ஒருவர் மயானத்தில் தென்னை, மாமரம் போன்ற மரங்களை நட்டு அதனை பராமரிப்பு செய்து வரும் விவசாய கூலித் தொழிலாளியினை தலைமைச்செயலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி நிதியுதவி அளித்து கௌரவித்துள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு மேற்கொண்ட அம்மாவட்ட ஆட்சியர், அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் பழ மரங்களும் நடப்பட்டு இருப்பதைப் பற்றி தலைமைச் செயலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருந்தார்.
யார் அந்த விவசாய கூலித்தொழிலாளி?
அம்மரங்களையெல்லாம் 70 வயதான அ.அர்ச்சுனன் என்பவர் நட்டு, பராமரிப்பு செய்கிறார் என்கிற தகவலையும் அறிக்கையில் தெரிவித்திருந்தார். விவசாயக் கூலியாக இருந்தாலும், மயானத்தில் மரங்களை நட்டு, மரகதச் சோலையாக மாற்றிய அ.அர்ச்சுனன் என்பவரை தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமைச் செயலகத்திற்கு இன்று நேரில் வரவழைத்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பாராட்டி, அவருக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.
மேற்படி மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டி, பாசன நீர் வசதி ஏற்படுத்தி, நன்றாகப் பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு நேர்முகக் கடிதமும் அனுப்பினார்.
அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை:
சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில், சுடுகாடுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பல இடங்களில் உள்ள மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படாமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காணப்படுகின்றது என குறிப்பிட்டிருந்தார்.
அதிக எண்ணிக்கையில் இறப்புகள் நடைபெறும் நகர்ப்புறங்களில் கூட முறையான வசதிகள் இல்லை எனவும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், மயானம் மற்றும் சுடுகாடுகள் அமைந்துள்ள இடங்களில் சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவு செய்யவும், மக்கள் அமர்வதற்கு ஏற்றவாறு வசதியினை மேற்கொள்வதோடு, குடிநீர் மற்றும் கொட்டகை வசதியினை அமைக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.
பசுமை மயானங்களாக உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள உங்கள் பகுதியில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தலாம். அதன் மூலமாக மயானங்களின் சூழலை மேம்படுத்துவதுடன் மற்றும் இறந்தவர்களின் உடல்களுடன் வரும் மக்களுக்கு உதவும் வகையிலும் இருக்கும் எனத் தெரிவித்திருந்தனர்.
தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும், இறையன்பு வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் புதிய தலைமைச்செயலாளர் குறித்த அறிவிப்பினை அரசு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
ரயிலில் செல்லப்பிராணியை அழைத்து செல்ல புதிய விதி- IRCTC தகவல்