சென்னையில், பசுமை பரப்பை 30 சதவீதமாக அதிகரிக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதற்காக, 800 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில், 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, 2.50 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பராமரிப்பு
பருவநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம், வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சென்னை மாநகரில் காற்று, நீர் மாசு அதிகரித்துள்ளது. இதை தவிர்க்கும் வகையில், சென்னையை, பசுமை சென்னையாக மாற்றும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. 'சிங்கார சென்னை 2.0' (Singara Chennai 2.0) திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் படி, தற்போதைய 13.6 சதவீத பசுமை பரப்பளவை, 30 சதவீதமாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. முக்கிய சாலைகளை ஒட்டிய பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், தெருவோரங்களில் மரங்கள் வளர்க்க வாய்ப்புள்ள பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. 30க்கும் மேற்பட்ட இடங்களில், 'மியாவாக்கி' என்ற அடர்வன காடுகள் உருவாக்க, 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சென்னையில் மொத்த பசுமை பரப்பளவு, 13.06 சதவீதமாக உள்ளது. இவற்றை, 30 சதவீதமாக மாற்றும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
பரப்பளவு
மே 7ம் தேதியில் இருந்து, சென்னை மாநகராட்சி மற்றும் குடியிருப்போர் நலசங்கங்கள் இணைந்து, அந்தந்த பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
திட்டம் குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில், பசுமை பரப்பை அதிகரிக்க, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், ஆண்டுக்கு 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.இதற்காக, 800க்கும் மேற்பட்ட, மாநகராட்சியின் திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், மரக்கன்றுகள் நட்டு, பசுமை பரப்பு அதிகரிக்கப்படும்.
இதை தவிர, புதிதாக அமைக்கப்படும் சாலைகளில், மழை நீர் வடிகால் மற்றும் மின் வழிதடங்கள் பாதிக்காதவாறு, சாலை ஓரங்களில் கட்டாயம் மரக்கன்று நட்டு, உரிய பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது, குடியிருப்போர் நலசங்கம், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். அதன்படி, தினந்தோறும், 500 முதல் 800 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன் வாயிலாக, சென்னயில் பசுமை பரப்பளவு கணிசமாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
20 சதவீதம் இலக்கு
சென்னையில், நேற்று முன்தினம் வரை, 54 ஆயிரத்து, 253 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், தெற்கு மண்டலத்தில், 19 ஆயிரத்து, 783 மரக்கன்றுகள்; வடக்கு மண்டலத்தில், 18 ஆயிரத்து, 823 மரக்கன்றுகள்; மத்திய மண்டலத்தில், 15 ஆயிரத்து, 647 மரகன்றுகள் நடப்பட்டுள்ளன. பசுமை பரப்பளவை 30 சதவீதமாக உயர்த்தும் தொலைநோக்கு திட்டத்தின் முதற்கட்டமாக, இந்தாண்டு இறுதிக்குள், 20 சதவீதம் என்ற இலக்கை எட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதை நோக்கியே மரக்கன்றுகள் நடும் பணி துரித கதியில் நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
மதுரையில் மழைப்பொழிவு குறையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல்!