மகரந்த சேர்க்கை மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி மேற்கொண்டுள்ள புதிய உத்தி அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மல்லப்பூர் மண்டலம், முத்தியம்பேட்டையில் உள்ள விவசாயி ஒருவர், அதிகப்படியான ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் அதிக மகசூல் தரும் பயிர்களை வளர்ப்பதற்காக மகரந்தச் சேர்க்கைக்கான புதிய முறையை கையாண்டு வருகிறார்.
2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து திரும்பிய 35 வயதான மர்ரிப்பள்ளி ஸ்ரீனிவாஸ் என்பவர் தற்போது சுமார் ஏழு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி, முலாம்பழம், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்ரீநிவாஸ் தனது தர்பூசணி வயல்களில், ஒரு குச்சியை எழுப்பி, வெல்லம் கலந்த கள் நிரப்பப்பட்ட கண்ணாடி குடுவையால் மூடியுள்ளார். ரசாயனங்களின் கண்மூடித்தனமான பயன்பாடு தேனீக்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது என்றார். மேலும் மகரந்தச் சேர்க்கை உற்பத்தி குறைவு மகசூல் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது எனவும் தெரிவித்துள்ளார். தேனீக்களை கவர்வதற்காக அவர் வெல்லத்தில் ஒரு சிறிய துணியை வைத்துள்ளார்.
ஸ்ரீனிவாஸ் கடந்த ஐந்து நாட்களாக இந்த முறையை கடைபிடித்து வருவதால் மகரந்த சேர்க்கை மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரின் இந்த முயற்சி சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
தேனீக்களை கவர புதிய முயற்சியை மேற்கொள்வது போல, ஸ்ரீநிவாஸ் இயற்கை விவசாய முறைகளையும் பின்பற்றி வருகிறார். உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பூச்சி மேலாண்மைக்கு சூரிய ஒளி (solar light) பொறிகளை நிறுவுகிறார். ரசாயனங்களைத் தவிர்க்க மாற்று இயற்கை முறைகளைப் பயன்படுத்துமாறு சக விவசாயிகளுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.
மேலும் ஸ்ரீநிவாஸ் தனது பழங்கள் மற்றும் காய்கறி விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதற்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார், மேலும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரங்களுக்கு பதிலாக சோலார் பொறிகளைப் பயன்படுத்துகிறார், இது பூச்சி மேலாண்மைக்கு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுக்கான தேவையானது ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், விவசாயிகள் ரசாயன முறைகளுக்கு மாற்றாக இயற்கை வேளாண் முறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண்க: