கடந்த 2005- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராம மக்களின் வருவாயை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் தினசரி கூலியினை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியது சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள் வரும் ஆகஸ்ட் மாத 31-க்குள் தாங்கள் சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதால், 100 நாள் திட்ட பணியாளர்களின் சம்பளம் நேரடியாக அவரது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம், இடைத்தரகர்கள் தலையீடு மற்றும் போலி பயனாளர்கள் சம்பளம் பெறுவதை தடுக்க இயலும் என நம்பப்படுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGS) வருகைப் பதிவு செய்யும் முறையிலும் தளர்வினை கொண்டு வருவதாக சமீபத்தில் ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஊரக வளர்ச்சி அமைச்சகம், வாரத்தில் ஆறு நாட்கள் தொழிலாளர்களின் புவிசார் குறியிடப்பட்ட புகைப்படங்களுடன் தினசரி காலையிலும் மற்றொன்று மாலையிலும் நேர முத்திரையிடப்பட்ட தொழிலாளர்களின் வருகையை செயலி மூலம் பதிவு செய்யுமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த உத்தரவு ஜனவரி 1, 2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள NMMS செயலி ( National Mobile Monitoring Software- NMMS ) மூலம் தொழிலாளர்களின் புவி-குறியிடப்பட்ட புகைப்படங்களுடன் வருகையை பணித்தள மேற்பார்வையாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
காலையில் எடுக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கைக்கும், மாலையில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களின் எண்ணிக்கைக்கும் இன்றளவும் வேறுபாடு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் செயலியில் உள்ள பிரச்சினையை எனக்கூறப்படுகிறது. இவ்வாறு NMMS செயலியில் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்கள் தேசிய தகவல் மையம் (NIC), ஊரக வளர்ச்சியுடன் நிகழ்நேர அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு:
வருகை மற்றும் முதல் புகைப்படத்தைப் பதிவேற்றிய 4 மணிநேரத்திற்குப் பிறகு, இரண்டாவது புகைப்படத்தைப் பிடிக்க NMMS பயன்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் புகைப்படம் மற்றும் இரண்டாவது புகைப்படத்தினை ஆஃப்லைன் பயன்முறையில் எடுக்கப்படலாம் மற்றும் சாதனம் நெட்வொர்க்கிற்கு வந்தவுடன் அதனை பதிவேற்றலாம்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் வருகைப் பதிவேடு பதிவேற்றம் செய்ய முடியாத பட்சத்தில், கைமுறையாக வருகைப் பதிவை பதிவேற்ற மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு (டிபிசி) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள மேற்பார்வையாளர்களுக்கு சீரான இடைவெளியில் NMMS பயன்பாட்டின் பயன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ள அமைச்சகத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
குவிண்டாலுக்கு ரூ. 10,000 வரை லாபம் தரும் குல்கைரா சாகுபடி
விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸாகும் Jio Air Fiber-ல் இவ்வளவு வசதியா?