நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி கடல் பகுதியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீர் செய்யப்பட்டு குழாய்கள் அகற்றப்பட்ட நிலையில் அதனை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகூர் பட்டினச்சேரி கரையோரம் செல்லும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான பத்தாண்டுகள் பழமையான எண்ணெய் குழாயின் ஒரு பகுதி கடந்த சில ஆண்டுகளாக செயலிழந்துள்ளது. அக்குழாயில் மார்ச் மாதத்தில் குறைந்தது நான்கு முறை 'எஞ்சிய எண்ணெய்' (residual oil) கசிந்தது. CPCL எண்ணெய் கசிவுகளை அடைத்த நிலையில், அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற பைப் லைனை தங்கள் அருகில் இருந்து அகற்ற வலியுறுத்தினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, CPCL தங்கள் பைப்லைனை முழுவதுமாக அகற்ற ஒப்புக்கொண்டது, மேலும் 850 மீட்டர் பகுதியை அகற்றியது.
எண்ணெய் குழாய்களை அகற்றக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தை தொடர்ந்து விரைவாக குழாய்கள் அகற்றப்பட்டதாக நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான அருண் தம்புராஜ், விஞ்ஞானி & பிரிவு தலைவர் (INCOIS ஹைதராபாத்) டாக்டர் சுதீர் ஜோசப், விஞ்ஞானி CPCB சென்னை பி.எம்.பூர்ணிமா, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், மீன்வளத்துறை இணை இயக்குநர் ஆகியோர் கொண்ட குழு பட்டினச்சேரிக்கு நேரில் வந்து அகற்றப்பட்ட குழாய்களை ஆய்வு செய்தனர்.
நாகூர் பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதி டி.சக்திவேல் கூறுகையில், "இதை அகற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மதித்து, நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கடற்கரை மாசுபாட்டிலிருந்து எங்களை விடுவித்துள்ளோம்" என்றார்.
முதலில் நாகப்பட்டினத்தில் செவ்வாய்கிழமை இது தொடர்பாக ஒரு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது, இதில் எண்ணெய் குழாய் அகற்றுவது தொடர்பான முன்னேற்றங்களை புதுப்பிக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட இருந்தன. இந்நிலையில் கூட்டம் இந்த வாரத்தில் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.சிபிசிஎல் பைப்லைனுக்கு இணையாக ஐஓசிஎல் பயன்படுத்திய பைப்லைனை அகற்றவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CPCL இன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து காரைக்கால் துறைமுகம் வரை ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் செல்கிறது. இது குறித்து சிபிசிஎல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எஞ்சிய குழாய்களும் வரும் மாதங்களில் அகற்றப்படும் என்றார். பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், பொது நலன்களைப் பாதுகாப்பதில் சிபிசிஎல் உறுதிபூண்டுள்ளது." என்றார்.
மேலும் காண்க:
தமிழக அரசின் பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் விருது வென்றவர்களின் முழு விவரம்