1. செய்திகள்

மீன்பிடித் தடைக்காலம் அமல்| அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்| மின்வேலி அமைக்க தடை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

1. தமிழகத்தில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்- மீன் விலை உயரும் அபாயம்

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை - மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக் காலம் நடைமுறையில் இருக்கும். மீன்பிடித் தடைக்காலம் அமலாகி உள்ள நிலையில் மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2. நபார்டு கிராமிய சந்தையினை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நபார்டு கிராமிய சந்தையினை வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் நபார்டு வங்கி உதவியுடன், சீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 இலட்சம் மானியத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கினை திறந்து வைத்தார். 2 பயனாளிகளுக்கு நபார்டு கிராமிய சந்தை உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உடன் இருந்தார்.

3. விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்காதீர்- மின்சார வாரியம் விழிப்புணர்வு

பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாதென மின்சார வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகள், பெரிய வனப்பரபை்பை கொண்டவை. இவ்வனப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் உணவு மற்றும் குடிநீர் தேடி - காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் படையெடுக்கின்றன. இதனைத் தடுக்க விவசாயிகள் மின்வேலி அமைத்து வரும் நிலையில், மின்சார வாரியம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சாலை- அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்

நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகில் மேடநாடு வனப்பகுதி உள்ளது. மேடநாடு வனப்பகுதி வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் தேயிலைத் தோட்டத்துக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

5. அய்யலூரில் 20 கோடி மதிப்பீட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போல், தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் “சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம்” ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும் எனவும், சென்னை, பள்ளிக்கரணையில் ரூ.20 கோடியில் சதுப்பு நில பாதுகாப்புப் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலை பாதுகாப்பில் சிறந்து பணியாற்றும் 100 நபர்களுக்கு நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

6. அதிக மருந்துகள் தெளிப்பதால் மகசூல் பாதிக்கும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்

தென்னை மரத்தில் தற்போது வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. வெள்ளை ஈ , சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை- நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

7. மீன்வளத்துறை ஊக்குவிக்க 80 சதவீத மானியம்- இமாச்சல தின விழாவில் அமைச்சர் பேச்சு

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் இன்று இமாச்சல தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் அம்மாநில தோட்டக்கலைத்துறை அமைச்சர் ஜகத் சிங் நேகி கலந்து கொண்டு கொடியேற்றினார். ஏப்ரல் 15, 1948 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் இந்தியாவில் ஒரு மாநிலமாக உருவானது. இது தொடர்பாக நடைப்பெற்ற விழாவில் பங்கேற்ற அம்மாநில வருவாய் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சர் ஜகத்சிங்க் நேகி, ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் மாநிலத்தின் சுற்றுலா மையமாக காங்க்ரா உருவாக்கப்படும் எனவும், மாநிலத்தில் மீன்வளத்தை ஊக்குவிக்க 80% வரை மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

8. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 வரை குறைந்து ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.560 குறைந்து 22 கேரட் தங்கம் ரூ.45,200 -ஆக விற்பனையாகிறது. எதிர்பாராத இந்த விலை இறக்கத்தினால் தங்கத்தினை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் காண்க:

SSC CGL தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு- யாரை அணுகுவது? எப்படி சேர்வது?

English Summary: A 61-day fishing ban came into force in Tamil Nadu Published on: 15 April 2023, 02:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.