ஒன்றிய அரசின் ஜன் ஜீவன் திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றி சாதனைப் புரிந்தமைக்காக காஞ்சிப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு ” பிரதமர் விருது” வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் என்பது 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற நடவடிக்கைகளை இந்த திட்டத்தின் மைய நோக்கமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக ஒன்றிய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி டெல்லியில் நடைப்பெற உள்ள விழாவில், பிரதமர் மோடி இவ்விருதினை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'ஜல் ஜீவன்' திட்டம் துவங்கியபின், புதிதாக 1.16 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் 100 சதவீதம் முடிவு பெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டு அந்தக்குழுவின் மூலம் குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டும் வருகிறது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமப்புற அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை நிறுவி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சென்றடைவதை உறுதி செய்யும் பணிகளும் நடைப்பெற்று வருகின்றன.
அண்மையில் கூட அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 1.73 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணியில் 75% மக்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கச் செய்ததைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கண்டுவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் உள்ள கடினமான நிலப்பரப்பிலும், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் அமிர்த காலத்தில் 75% மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இதை செய்த குழுவிற்கு பாராட்டுக்கள், மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் நிறைவு செய்ய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் காண்க:
குப்பை கிடங்குகளை கண்காணிக்க ட்ரோன்- உலக வங்கியை நாடும் மாநில அரசு
பயிர்க்கடன் வழங்குவதில் சாதனை- சேலம் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்