காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கின்றது. அதோடு, நிரந்தர பந்தல் அமைக்க ரூ. 4 லட்சம் வழங்கப்பட இருக்கின்றது. இது போன்ற இன்றைய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகின்றது.
காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோயில் வட்டாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் எனும் வீதத்தில் 2½ ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
நிரந்தரப் பந்தல் அமைக்க ரூ. 4 லட்சம் மானியம்
விவசாயிகளுக்கு நிரந்தர குடில் அமைக்க ஹெக்டேருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறி விலைச்சல் அதிக அளவில் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து கல்தூண்கள் அமைத்து நிரந்தரப் பந்தல் அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட இருக்கின்றது. பந்தல் அமைப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ. 4 லட்சமும், பின்னேற்பு மானியமாக ரூ. 80 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. எனவே, விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் படிக்க: குடும்பக் கட்டுபாடு சிகிச்சை இழப்பீடு ரூ. 4 லட்சமாக உயர்வு!
ரூ. 34 லட்சத்துக்கு ஏலம் போன எள்! விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடில் உள்ள சிவகிரி விற்பனை கூடத்தில் ரூ. 34 லட்சத்துக்கும் மேல் எள் ஏலம் போயுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிவகிரி-யைச் சுற்றியுள்ள எள் விவசாயிகள் சுமார் 413 மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். மொத்தமாக இருந்த 30,572 கிலோ எடைகொண்ட எள் ரூ. 34 லட்சத்து 24 ஆயிரத்து 296 -க்கு விற்பனையாகி உள்ளது. இது மகிழ்ச்சியைத் தந்துள்ளது என எள் விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.
Agri Intex 2022 வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவு!
கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் Agri Index 2022 மூன்று நாள் வேளாண் கண்காட்சி கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டு நடந்து வருகின்றது. விவசாயம், தோட்டக்கலை, பால் பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Agri Index 2022-ஐ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்வேளாண் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் புதுதில்லியில் உள்ள கிரிஷி ஜாக்ரன் குழுவினரும் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டையின் விலையில் சரிவு
நாமக்கல மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. இதனால் முட்டைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஜூலை 9-ஆம் தேதிகளில் முட்டைகளின் பண்ணை கொள்முதல் விலையானது 5 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில், விலை படிப்படியாகக் குறைந்து இன்று 4 ரூபாய் 40 காசுகளாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் முட்டையின் விலை 1 ரூபாய் 10 காசுகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி மாத பண்டிகைகள் துவக்கம், வட மாநிலங்களில் விற்பனை சரிவு முதலான காரணங்களால் விலை சரிந்துள்ளது எனவும், ஆடி மாதம் முடியும் வரை இந்த நிலை இருக்கும் எனவும் முட்டைப் பண்ணையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
வானிலை தகவல்கள்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க