வெங்காயம் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை, எந்த விவசாயிக்கும் குறைந்த விலை கிடைக்காது என்பது உறுதி என்று ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தெரிவித்துள்ளார்.
வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை அண்மையில் ஒன்றிய அரசு விதித்ததை எதிர்த்து மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒன்றிய வேளாண் அமைச்சர் மேற்குறிப்பிட்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இருப்பு மற்றும் சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இந்த ஏற்றுமதி வரியானது டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள நாசிக், லாசல்கான் மற்றும் சில பகுதிகளில் உள்ள விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களில் (ஏபிஎம்சி) விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஏற்றுமதி வரியை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெங்காய ஏலத்தை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ANI-யிடம் அளித்த பேட்டியில், “வெங்காயம் குறித்து எந்த விவசாயியும் கவலைப்படத் தேவையில்லை. எதிர்கால சூழ்நிலையை மனதில் வைத்து, மத்திய அரசு ஒரு முடிவெடுத்தாலும், எந்த விவசாயிக்கும் இதனால் பொருளாதார இழப்பு இருக்காது என்ற உத்தரவாதம் வழங்குகிறோம், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. NAFED வெங்காயத்தை கொள்முதல் செய்கிறது. இது விவசாயிகளுக்கு நல்ல விலையை வழங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவிக்கையில், இருப்புக்காக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை அரசாங்கம் கொள்முதல் செய்யத் தொடங்கும் என்று கூறினார். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் பிற பகுதிகளில் உள்ள வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. வெங்காயத்தை குவிண்டாலுக்கு ரூ.2,410 என்ற விலையில் அரசு கொள்முதல் செய்வதோடு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியத் தொகை வழங்கப்படும் என்று கோயல் உறுதியளித்தார்.
நாசிக், பிம்பால்கான், லாசல்கான், அகமதுநகர் மற்றும் முழு பிராந்தியம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை வாங்குவதற்கு NCCF மற்றும் NAFED தொடங்கும் என்று கோயல் கூறினார். ஏற்றுமதி வரி குறித்து விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் பாஸ்மதி அல்லாத சில வெள்ளை நிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது புழுங்கல் அரிசிக்கும் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்வை உண்டாக்கியுள்ளது.
மேலும் காண்க:
ஆதார் அப்டேட் தொடர்பா WhatsApp மெசேஜ் வருதா? உஷாரா இருங்க
திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய்- முதல்வர் அதிரடி உத்தரவு