குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனிடையே, குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது இது 19-வது முறையாகும். குறுவை, சம்பா, தாளடி பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் குறித்த விவரங்கள் பின்வருமாறு-
சம்பா மற்றும் தாளடி பாசனம்:
மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டி.எம்.சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.
குறுவை சாகுபடி:
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று ஜீன் மாதம் 12-ம் தேதி காலை வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு ஜூன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து படிப்படியாக வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் வினாடிக்கு 18,000 கனஅடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை, சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதமும் அடுத்த 15 நாட்களுக்கு படிப்படியாக வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் வழங்கப்படும். அக்டோபர் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 22,000 கனஅடி வீதமும் அடுத்த 15 நாட்களுக்கு நீர் தேவைக்கேற்ப வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் வழங்கப்படும்.
நவம்பர் மாதத்திற்கு தண்ணீர் தேவைக்கேற்ப வினாடிக்கு 10,000 கனஅடி வீதமும், டிசம்பர் மாதத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதமும் ஜனவரி மாதத்திற்க்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும் வழங்கப்படும்.
மின் உற்பத்தி விவரம்:
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்துவிடப்படும் பொழுது அணை மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின்நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ்பகுதியில் 7 கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் 7 X 30 மெகாவாட் ஆக மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பாசன தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் வழங்கப்படும் என அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
90 ஆண்டுக்கால வரலாற்றில் 19-வது முறையாக மேட்டூர் அணை திறப்பு!