மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் கீழ் கடந்த 7 மாதங்களில் 1,203 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பயிர் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மகாராஷ்டிராவின் விவசாய சமூகத்தினரிடையே மிகப்பெரிய கவலையினை உண்டாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் கீழ் கடந்த ஏழு மாதங்களில் 1,203 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியின் கீழ் இரண்டரை ஆண்டுகளில் 1,660 விவசாயிகள் இறந்துள்ளனர். 2014 மற்றும் 2019-க்கு இடையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது 5,061 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியிடப்பட்ட தரவினை மேற்கோள்காட்டி, மூத்த NCP தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், ” ஷிண்டே-ஃபட்னாவிஸ் நிர்வாகத்தின் கீழ் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், ஆளும் அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளில் உணர்வற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்” .
"எந்தவொரு தனிநபரையும் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட முதலமைச்சரையும் நாங்கள் குறை கூற விரும்பவில்லை, ஆனால் ஷிண்டே அரசாங்கத்தில் விவசாயிகள் அதிக அளவில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் என்பது கடுமையான உண்மை. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பருத்தி, வெங்காயம், சோயாபீன் விளைவித்த விவசாயிகளின் பயிர்களுக்கு இந்த ஆண்டு நியாயமான விலை கிடைக்கவில்லை, வெங்காய விவசாயிகள் விளைபொருட்களை சாலையில் வீசி சிலர் விளைநிலங்களில் தீ வைத்து எரிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோம்" என பவார் கூறினார். "மராத்வாடா பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அதே நேரத்தில் பீட் மாவட்டத்தில் மொத்தம் 22 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.
விவசாயிகள் தற்கொலை பிரச்சினை விஸ்வரூபமெடுத்த நிலையில், ஒன்றிய அரசு சார்பில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் வழங்கப்படுவதைப்போல், 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டின் ஒரு பகுதியாக நிதியமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உழவர்களுக்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், என்சிபி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ஆளும் அரசாங்கத்தின் கீழ் விவசாயிகள் ஜாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறார்கள். பாட்டீல் சாங்லி மாவட்டத்தில் ரசாயன உரங்களை வாங்கும் முன் விவசாயிகளிடம் அவர்களின் ஜாதியைக் கேட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.“ இப்போது அரசு தளத்தில் உரம் வாங்கும் போது விவசாயியின் ஜாதி கேட்கப்பட்டது.விவசாயிகளை ஜாதியைக் கேட்டு அவமானப்படுத்துவது கண்டனத்திற்குரியது” என்றார்.
ஜாதி பாகுபாடு சம்பவத்தை விமர்சித்த என்சிபி தலைவர் சரத் பவார், "விவசாயிகளிடம் ஜாதி கேட்பது தவறு. இந்த நாட்டின் வரலாற்றிலோ அல்லது மாநிலத்திலோ இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. வெங்காய விவசாயிகளுக்கு உதவவோ அல்லது மானியம் வழங்கவோ தவறியதற்காக மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கத்தையும் NCP தலைவர் கடுமையாக தாக்கி பேசினார். விவசாயிகளின் வெங்காயத்தை அரசு வாங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற அண்டை மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் விவசாயிகளுக்கு உதவி வருகின்றன. ஆனால் நமது மாநிலம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறது. விவசாயிகளை துயரத்தில் இருந்து காப்பாற்ற மாநில அரசு முன்வர வேண்டும்" என்று பவார் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் மொத்தம் 7,444 விவசாயிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் சமூக ஆர்வலர்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது. தற்கொலைகளைப் பற்றி விவாதிப்பது சிலருக்குத் தூண்டுதலாக இருக்கலாம். இருப்பினும், தற்கொலைகள் தடுக்கக்கூடியவை. மன உளைச்சலுக்கு ஆளானாலோ அல்லது தற்கொலை எண்ணத்தில் உள்ள யாரையாவது அறிந்தாலோ, சினேகா அறக்கட்டளையை அழைக்கவும் - 04424640050 (24x7 ).
மேலும் காண்க:
நெசவாளர்களின் துயர் துடைக்க வீதிகளில் கைத்தறி ஆடைகளை விற்றவர் அண்ணா- முதல்வர் நெகிழ்ச்சி
பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?