சேலம் மற்றும் புதுக்கோட்டையில் குடோன் மற்றும் இதர வசதிகளுடன் கூடுதலாக இரண்டு புதிய உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
உணவு தானியங்கள் கெட்டு போகாமல் பாதுகாக்க திருப்பூர், அரியலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 குடோன்கள் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் நிதியில் மொத்தம் 100 நேரடி கொள்முதல் நிலையங்களும், டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் 1.17 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் குடோன்களும் கட்டப்படும் என்றார். சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணா நகரில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகள் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சேலம் மற்றும் புதுக்கோட்டையில் குடோன் மற்றும் இதர வசதிகளுடன் கூடுதலாக இரண்டு புதிய உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டு மனைகள் வாங்குவதற்கான கடன் வழங்கப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களுக்கு கடன் பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 60 ஆண்டுகளில் இருந்து 70 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தருமபுரி மற்றும் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் லாக்கர் வசதி ஏற்படுத்தப்படும். திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் ரூ.97 லட்சத்தில் பல்நோக்கு அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார், அமைச்சர். 19 லட்சம் செலவில் சோப்பு தயாரிப்பு பிரிவும் அமைக்கப்படும். 1500 PDS கடைகள் புதுப்பிக்கப்படும். கூட்டுறவு துறையின் 5,000 பி.டி.எஸ் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ: 9001 சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904 இல் நிறுவப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார் பெரியகருப்பன். நபார்டு வங்கியின் ஆதரவுடன் மொத்தம் 2,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்குச் சேவை மையங்களாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க