அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சியில் நடைபெற்று வரும் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகளைப் பார்வையிட்டார், பின்னர் விவசாயிகள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் (Athikadavu - avinashi project scheme) கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் பயன்பெறுகின்ற விதமாக இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த 3 மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த 50 ஆண்டுகால அரசுக்கு வைத்த கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தை மாநில அரசின் நிதியிலிருந்தே செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வழங்கி, ஒப்பந்தம் விடப்பட்டு, அந்தப் பணி துரிதமாக இரவு, பகல் பாராமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்
இந்தத் திட்டத்தினால் சுமார் 24,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதில், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 970 குளங்கள் ஆகியவற்றில் நீர் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைக்கவும், குடிப்பதற்குத் தேவையான நீர் கிடைக்கவும் இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும். இந்தத் திட்டம் 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டு, அந்தப் பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 6 நீரேற்று மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே, அரசு எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதனை துரிதமாக நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றது.
தடுப்பணைகள் : 1000 கோடி ரூபாய் நிதி
விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மூன்றாண்டு காலத் திட்டமாக பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதையும் தேக்கி வைக்க வேண்டுமென்பதற்காக தடுப்பணைகள் கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் தடுப்பணைகள் கட்ட இருக்கிறோம். பவானி ஆற்றில் மட்டும் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டவிருக்கிறோம். ஜம்பை என்ற இடத்தில் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்து, அந்தப் பணிகள் துவங்க இருக்கின்றன.
மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் உபரியாக வெளியில் சென்று வீணாகின்றது. அப்படிப்பட்ட நீரை ஆங்காங்கே தேக்கி வைத்து நிலத்தடி நீர் உயர்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடிமராமத்து திட்டம்
விவசாயிகளின் கனவுத் திட்டம் குடிமராமத்துத் திட்டம். இத்திட்டத்திற்காக சுமார் 1,400 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுப்பணித் துறையின் கீழ் வருகின்ற, 6000-க்கும் மேற்பட்ட ஏரிகளை எடுத்து, முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கு டெண்டர் விடுவது கிடையாது. விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பிரதிநிதிகள், அந்தப் பாசன ஏரிக்குட்பட்ட ஆயக்கட்டுக்காரர்களை வைத்துத்தான் இந்தப் பணிகளை துவக்குகின்றோம்.
ஏரிகளை தூர்வாருவதன் மூலமாக அள்ளப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகிறது, ஏரிகளும் ஆழமாகிறது. பெய்த மழைநீர் தேங்கி விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் நீர் கிடைக்கின்றது. இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டு, விவசாயிகள் பயன்பெறுகின்ற விதத்தில் நிலத்தடிநீர் செறிவூட்டப்படும். இந்தத் திட்டத்தின் வாயிலாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்
1000 கோடி மதிப்பீட்டில் கால்நடைப் பூங்கா
விவசாயிகளுக்கு உபதொழிலாக இருக்கும் கால்நடைத் தொழில் மேலும் சிறக்க தலைவாசல் கூட்டு ரோட்டில் கால்நடைப் பூங்கா என்ற மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் அந்தத் திட்டம் நிறைவேற இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடைப் பூங்கா அமைக்கவிருக்கிறோம். நம்முடைய விவசாயிகள் வளர்க்கின்ற ஒரு பசு சுமார் 10 லிட்டர் பால் கறந்தால், இந்தக் கால்நடைப் பூங்காவில், நம்முடைய சீதோஷண நிலைக்கேற்ற கலப்பினப் பசுக்களை உருவாக்கி, அதன்மூலம் சுமார் 25 லிட்டர் பால் கறப்பதற்கான நிலையை உருவாக்கித் தரவிருக்கிறோம். அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.
ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மார்க்கெட்
விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடனாக சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை விற்பனை செய்வதற்காக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து 10 மாவட்டங்களில் தலா ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மார்க்கெட் அமைக்கவிருக்கிறோம். அந்தப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
அதேபோல, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் மானிய விலையில் டிராக்டர் வழங்குகிறோம். விவசாயிகள் உழவு செய்வதற்குத் தேவையான வேளாண் கருவிகள் குறைந்த வாடகையில் கிடைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம்.
பூச்சி தாக்குதல்
தென்னை வளர்க்கின்ற விவசாயிகள், வெள்ளை ஈயால் தென்னை பாதிக்கப்படுவதாகவும், வெள்ளை ஈயை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை வைத்ததை ஏற்று, அரசு நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளை ஈயை ஒழிப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
கடந்த ஆண்டு மக்காச்சோளப் பயிரிட்டு, அமெரிக்கன் படைப்புழுவினால் கடுமையான பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு ரூபாய் 186 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளோம். இந்த ஆண்டும் அமெரிக்கன் படைப்புழுவினால் மக்காச் சோளப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். உடனடியாக, சம்பந்தப்பட்ட துறைச் செயலாளரை அனுப்பி, பார்வையிட்டு, பாதிப்பைக் கண்டறிந்து, அதற்காக ரூபாய் 49 கோடி நிதி ஒதுக்கீடு செய்து,பாதிக்கப்பட்ட அனைத்து மக்காச்சோளப் பயிர்களுக்கும் அரசாங்கமே பூச்சி மருந்துதெளித்து அந்த நோயைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இதனால் விவசாயிகள்,95 சதவிகிதம் விளைச்சல் பெற்றுள்ளார்கள்.
அதேபோல, காற்றினால், வாழைமரம் உடைந்து பாதிப்படைந்தால், அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் இழப்பீடு தருகிறோம்.
நெல் கொள்முதல் செய்து சாதனை
டெல்டா பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் நெல் கொள்முதல் செய்தது கிடையாது. ஆனால் அதைவிட அதிகமாக இந்த ஆண்டு 24 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 3 லட்சம் மெட்ரிக் டன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், ஏறத்தாழ 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை படைத்த அரசாக அதிமுக அரசு திகழும். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டதால் விவசாயிகள் உரிய நேரத்தில் பயிர் செய்து நல்ல விளைச்சலை பெற்றுள்ளனர்.
சரியான முறையில் தூர்வாரிய காரணத்தினால் டெல்டா பகுதிகளின் கடைமடைப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் போய்ச் சேர்ந்துள்ளது. மேலும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பல்வேறு சாதனைகளை விவசாயிகளுக்காக செய்துள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் படிக்க..
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?
முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!