ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்பை கனரா வங்கி உயர்த்தியுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு ஏடிஎம் -மில் இருந்து ரூ.75,000 வரை பணம் எடுக்க முடியும்.
atm
முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank) தினசரி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ஸ்வைப்பிங் மெஷினில் பரிவர்த்தனை செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கான தினசரி வரம்பையும் கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
இணையதளம்
உயர்த்தப்பட்ட புதிய வரம்புகள் குறித்த விவரங்களை கனரா வங்கி தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, கிளாசிக் டெபிட் கார்டு (Classic Debit card) பயன்படுத்துவோருக்கு தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 40,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சம்
இதுமட்டுமல்லாமல், ஸ்வைப்பிங் மெஷின் (Swiping machine) பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்பு 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. Contactless NFC பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்பு 25,000 ரூபாயாக உள்ளது.
ரூ.1 லட்சம்
பிளாட்டினம் மற்றும் பிசினஸ் டெபிட் கார்டுகளுக்கு (Platinum/Business Debit cards) தினசரி ஏடிஎம் பணப் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. NFC பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரம்பு 25000 ரூபாயாக உள்ளது.
சர்வதேச பரிவர்த்தனைகள்
இந்த பரிவர்த்தனை வரம்புகள் அனைத்தும் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கானதாகும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, புதிதாக வழங்கப்படும் அனைத்து ஏடிஎம் கார்டுகளிலும் உள்நாட்டு பரிவர்த்தனை வசதி மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கும். சர்வதேச பரிவர்த்தனைகள் இயல்பாகவே செயல்படுத்தப்படாமல் இருக்கும். எனவே, புதிய டெபிட் கார்டு வாங்கியபின் வாடிக்கையாளர் தனது தேவைக்கு ஏற்ப சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான வசதியை செயல்படுத்திக்கொள்ளலாம் என கனரா வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!