பறவைக்காய்ச்சல் ஆண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக விலங்குகள் மற்றும் நோய் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
நான்கு கண்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், விவசாயிகளுடன் பறவைக்காய்ச்சல் பரவல் குறித்து விவாதித்துள்ளனர். கோழி பண்ணைகளில் சமீபத்திய தொற்றுநோய்கள் தொடரும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சீதோஷண காலங்களில் மட்டும் பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் ஆண்டு முழுவதும் நோய் பரவலை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வைரஸ் தொடர்ந்து பரவுகிறது. இந்த நோயினால் கடந்த ஆண்டு மட்டும் கோடிக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து முட்டை விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. புரதப்பொருள் நிறைந்த உணவான முட்டை அன்றாட வாழ்வில் தினசரி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, வைரஸ் பரவுவதற்கு பெரும்பாலும் காட்டுப் பறவைகளே காரணம். வாத்துகள் மற்றும் பிற நீர்ப்பறவைகள் நோயைச் சுமந்து மற்ற உயிரினங்களுக்கு பரவ வழிவகை செய்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட மலம், உமிழ்நீர் மற்றும் பிற முறைகள் மூலம் கோழிகளுக்கு எளிதில் பரவுகிறது. அச்சமயங்களில் விவசாயிகள் தங்கள் பறவைகளைப் பாதுகாக்க எடுக்கும் சிறந்த முயற்சிகளும் பயனற்றதாகிவிடுகிறது.
பொதுவாக ஒரு பண்ணையிலுள்ள ஒரு கோழிக்கு பறவைக் காய்ச்சலின் தொற்று உறுதியானாலும், பண்ணையிலுள்ள அனைத்து கோழிகளையும் அழிக்கும் நிலைக்கு பண்ணை உரிமையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இது பொருளாதார ரீதியிலும் பலத்த பாதிப்பினை உண்டாக்குகிறது.
தடுப்பூசிகளால் வைரஸின் அச்சுறுத்தல் குறைக்கப்படலாமே தவிர முற்றிலும் அழிக்க முடியாது. பறவைகளில் வைரஸ் பாதிப்பை கண்டறிவது இன்றளவிலும் கடினமாக உள்ளது. பறவைக்காய்ச்சல் வைரஸினால் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லையென்றாலும் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
உள்நாட்டில் கோழி உற்பத்தியில் பெரும்பகுதியை உட்கொள்ளும் சீனா, ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பறவைக் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட்டு வருகிறது. இதனால் பாதிப்பின் தாக்கம் குறைவாக உள்ளது.
ஆனால், உலகிலேயே அதிக அளவில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் நாடான அமெரிக்கா இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் உலகளவில் கடுமையாக 58 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து கனடாவும், பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியங்களும் பறவைக்காய்ச்சல் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:
என்னங்க சொல்றீங்க..24 வருஷமா தேங்காயை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறாரா?
பள்ளி மாணவர்களின் செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த ஹைபிரிட் ராக்கெட்