மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஏரிகளும், அணைகளும் நிரம்பி வழிகிறது. அவ்வகையில், தொடர்மழையால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 88 அடியை நெருங்கி வருகிறது.
பவானிசாகர் அணை (Bhavanisagar Dam)
ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை இன்றும் உள்ளது. பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் முக்கிய நீர்ப் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா மற்றும் பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றைய தினமும், பவானிசாகர் அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், கடந்த நான்கு தினங்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்று, காலைநேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டமானது 87.70 அடியாக இருந்தது. அணைக்கு, ஒரு விநாடிக்கு 6,736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து, தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன வசதிக்கு 900 கன அடியும், குடிநீர்த் தேவைக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தமாக 1005 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு, நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான அணைகளில் ஒன்று பவானிசாகர் அணை. மழையின் காரணமாக தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 88 அடியை கடந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு!
4 நாட்களில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ்: அமைச்சர் அறிவிப்பு!