நேற்று மாலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பிப்பர்ஜாய் புயல்-biporjoy cyclone வலுவடைந்த நிலையில் இன்று தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிப்பர்ஜாய் புயலின் திசை என்ன?
நேற்று (06.06.2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை 11:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை 05:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் "பிப்பர்ஜாய்" biporjoy cyclone புயலாக மேலும் வலுவடைந்தது.
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென் மேற்கே சுமார் 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.06.2023 மற்றும் 09.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.06.2023 மற்றும் 11.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
07.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலினையொட்டி biporjoy cyclone அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு Mausam.imd.gov.in/Chennai இணையதளத்தை காணவும்.
மேலும் காண்க:
MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு