சிவப்பாக இருப்பதெல்லாம் செர்ரி பழம் அல்ல என சொல்லத் தோன்றும்வகையில், போலி செர்ரி பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது களாக்காய்க்கு செயற்கை நிறம் ஏற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து செர்ரி பழம் என விற்பனை செய்யும் மோசடி நடக்கிறது. எனவே செர்ரி பழம் வாங்குவோர் உஷாராக இருக்க வேண்டும்' என்று, உணவுப் பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழத்தையே பார்த்துப் பழகிய பலருக்கு, குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய செர்ரி பழம் எப்படியிருக்கும் என்பது தெரியாது. 'சிகப்பாக இருக்கும்; இனிப்பாக இருக்கும்' என்ற அளவிலேயே பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
போலி மோசடி
விலை மலிவாக கிடைக்கும் களாக்காயும், விலை அதிகம் கொண்ட செர்ரி பழமும் ஒன்று போலவே இருக்கும் என்பது, பலருக்கு தெரிவதில்லை. இதனால் கடைகளிலும், தள்ளுவண்டிகளிலும் களாக்காயை, செர்ரி பழம் என்று கூறி விற்கின்றனர்.
விதைகள் அகற்றம்
இந்த மோசடியை அரங்கேற்ற, களாக்காயில் இருந்து விதையை அகற்றி விடுகின்றனர். அதற்கு சிகப்பு நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்தால், செக்கச்சிவந்த செர்ரி பழம் தயாராகி விடுகிறது.
பேக்கரிகளிலும்
பேக்கரிகளில் தயார் செய்யும் கேக்குகளில் கூட, செர்ரிக்கு பதில் களாக்காய்களே பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக கிடைக்கும் களாக்காயும் சாப்பிடக்கூடியதுதான். மருத்துவ குணங்களும் நிறைந்த இந்தப் பழத்திற்கு, செயற்கை நிறமேற்றுவதுதான் தவறு.
எச்சரிக்கும் உணவுத்துறையினர்
சர்க்கரை பாகில் ஊற வைப்பதும் தவறு. அதை இன்னொரு பழத்தின் பெயரில் விற்பனை செய்வதும், இன்னும் பெரிய தவறு' என்கின்றனர் உணவுப் பாதுகாப்புத்துறையினர்.
கண்டுபிடிக்க வழிகள்
-
சர்க்கரை பாகில் ஊறிய களாக்காயை, தொட்டுப்பார்த்தால் பாகு பிசுபிசுவென ஒட்டும்.
-
தண்ணீரில் ஊற வைத்தால் செயற்கை நிறம் போய், களாக்காயின் இயற்கை நிறம் வந்து விடும்.
புகார் அளிக்க
உணவுப்பொருட்களில் கலப்படம், செயற்கை நிறம் ஏற்றுதல், வேறு பெயர்களில் விற்று மோசடி செய்தல் போன்ற புகார்களை, 94440 42322 என்ற எண்ணுக்கு, வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம் என்கின்றனர் உணவுப்பாதுகாப்புத்துறையினர். வெள்ளையாக இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு சொல்வாங்களே' என்று, ஒரு தமிழ் படத்தில் வசனம் வரும். அதைப்போன்றது தான், சிகப்பாக இருப்பதெல்லாம் செர்ரி பழம் என்று நம்பி ஏமாறுவதும். உஷார் ஆகுங்க மக்களே.
மேலும் படிக்க...