தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த திட்டமா என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து அதில் உள்ள குறைகளைக் களைய
வேண்டும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் செயலாளர் அமர்ஜீத் சின்ஹா தலைமையிலான குழு அடுத்த 3 மாதங்களில் அதன் பரிந்துரை அறிக்கையினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டமும் கடந்த நவம்பர் 21-ஆம் தில்லியில் நடைபெற்று முடிந்துள்ளது. வல்லுனர் குழுவின் அதிகார வரம்புகளில், இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை ஊதியம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது? என்பது பற்றிய பரிந்துரை அளிக்கப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி ஆகும்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி வழங்கப்பட்ட நிதியினைச் சரியாக பயன்படுத்தாத பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்; நிதியை சிறப்பாக பயன்படுத்திப் பயனுள்ள சொத்துகளை உருவாக்கிய தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கு இந்தத் திட்டம் தேவையில்லை என்பது தான் வல்லுனர் குழு உறுப்பினரின் பார்வை ஆகும். இந்த இலக்கை நோக்கித் தான் வல்லுனர் குழு பயணிக்குமோ? என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மத்திய அரசின் விதிகள் மற்றும் மரபுகள் ஆகியன சிறப்பான செயல்பாட்டை தண்டிக்கும் வகையில் தான் உள்ளன. மத்திய அரசின் வரி வருவாயில் 41% மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கிடைக்கும் வரி வருவாயின் அடிப்படையில் இது பகிர்ந்தளிக்கப்பட்டால் தமிழகத்திற்கு என இரண்டாவது அதிக பங்கு கிடைக்க வேண்டும்.
ஆனால், வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உத்தரபிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் முதலான மாநிலங்களுக்கு 18% வரைஅள்ளிக் கொடுத்து விட்டு, தமிழகத்திற்கு 4.07% மட்டுமே வழங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த மாநிலங்களைத் தண்டிக்கும் இந்த அணுகுமுறை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகவே அமையும் என்று கூறப்பட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில குறைகள் உள்ளன. இத்திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை முதலான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது உண்மை தான். இருந்தாலும் அவற்றைக் கடந்து இது ஒரு சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம் என்பதை மறுக்க முடியாது.
கொரோனா காலத்தில் இந்த உண்மை அனைவராலும் உணரப்பட்டது. இத்திட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 67.86 லட்சம் குடும்பங்களுக்கு சராசரியாக 50 நாட்கள் வேலை வழங்கப்பட்டு இருக்கிறது. நடப்பாண்டில் இதுவரை 59.58 லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளை களைவது, வேளாண் பணிகளுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிப்பது முதலான ஆக்கப்பூர்வமான மாற்றங்களை பரிந்துரைப்பது தான் வல்லுனர் குழுவின் நோக்கமாக இருத்தல் வேண்டும். வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகம் போன்ற மாநிலங்களில் இத்திட்டத்திற்கு மூடுவிழா நடத்த பரிந்துரைக்கக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 540 மெட்ரிக் டன் யூரியா உரம் வருகை!!