M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மற்றும் பிராந்திய வானிலை மையம் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வானிலைத் தன்மைக்கேற்ப கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகப்பட்ச வெப்ப நிலையானது 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். காற்றின் வேகமானது மணிக்கு 8 முதல் 10 கி.மீ வேகத்திலும், தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலைத் தன்மைக்கேற்ப விவசாயிகளுக்கான அறிவுரை விவரம் பின்வருமாறு-
கால்நடை வளர்ப்பு:
கால்நடை வளர்ப்போர் பகல் நேரங்களில் 30-60 நிமிட இடைவெளியில் 1 முதல் 5 நிமிடங்களுக்கு விலங்குகளின் உடலில் நேரடியாக தண்ணீரை தெளிப்பதன் மூலம் வெப்ப அழுத்தத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்கலாம். மாட்டு கொட்டகையின் பக்கவாட்டில் (ஓரங்களில்) ஈரமான சணல் சாக்குபைகளை கட்டி விடவும். தாதுக்களுக்கான அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெப்பமான காலநிலையின் போது விலங்குகளுக்கு அதிகரித்த தாது உப்புச் சேர்க்கையை உறுதி செய்யவும். கால்நடைகளுக்கு குறிப்பாக பொட்டாசியம் நிறைந்த தாதுக்கலவையினை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நிலவும் அதிகரித்த உயர் வெப்பநிலையை கருத்திற் கொண்டு தங்களது கால்நடைகளுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழத்தின் தானுவாஸ் தாதுக் கலவையினை ஒரு நாளைக்கு ஒரு கால்நடைக்கு 50 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
விவசாயம்:
மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு (07.04.2024 முதல் 09.04.2024) அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பத்ததுடன் கூடிய அசவுகரியமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வயல்வெளி வேலைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் செய்ய திட்டமிடவும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் படியும் மதிய (12 மணி முதல் 4 மணி வரை) நேரத்தில் வயலில் வேலை செய்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பப்பாளி:
பப்பாளி பழப் பயிரில் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக தென்படுகின்றது. வெள்ளை ஈ தாக்குதலின் காரணமாக இவற்றின் இளம் பூச்சிகள் மற்றும் வண்டுகள் இலையின் அடிப்புறத்திலிருந்து சாற்றை உறிஞ்சும் மேலும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இதனைக் கட்டுப்படுத்த செடியின் உயரத்திற்கேற்ப ஏக்கருக்கு x என்ற எண்ணிக்கையில் மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி அட்டையினை கட்டி விடவும்.
மேலும் 250 கிராம் பச்சைமிளகாய், 250 கிராம் பூண்டு மற்றும் 100 கிராம் இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து அதனை மூன்று லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து (3 ஜி) கரைசல் தயாரிக்கவும். இந்த கரைசலில் இருந்து 300 மில்லி எடுத்து அதனுடன் 4 கிராம் சூடோமோனாஸ். 30 மில்லி கோழி முட்டையின் வெள்ளைக்கரு இவற்றுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
Read more: World Health Day 2024: உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் என்ன?
ரோஜா:
ரோஜா மலர் பயிரில் சிவப்பு செதில் பூச்சிகளின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இப்பூச்சிகள் செடிகளில் சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய கிளைகளை அகற்றி எரித்து விட வேண்டும். செதில் பூச்சி கூட்டமாகக் காணப்படும் தண்டுப் பகுதியை டீசல் அல்லது மண்ணெண்ணெயில் முக்கிய பஞ்சினால் துடைத்து விட வேண்டும்.
கவாத்து செய்யும் போது மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் மீன் எண்ணெய் ரெசின் சோப் கலந்து தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read also:
உடலுறவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன?
வல்வோடினியா- பிறப்புறுப்பு பகுதியில் தாங்க முடியாத வலிக்கு காரணம் இதுதானா?