மயிலாடுதுறை மாவட்டத்தில் நட்ப்பாண்டு 65 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையில் சாகுபடி பணிகளை விரைந்து விவசாயிகள் மேற்கொண்டனர். இருப்பினும் சீர்காழி மற்றும் கொள்ளிடம் தாலுகா பகுதிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்தும் சரிவர கடைமடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடைமடைப் பகுதி (Kadaimadai Place)
சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் கழுமலையாறு, பொறை வாய்க்கால், மண்ணியாறு, தெற்கு ராஜன் ஆகியவற்றில் பாலம் மற்றும் சிறு சிறு கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளில் திட்டமிட்டு தண்ணீர் திறந்து விடாதவாறு பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திருப்பி மாற்றி அனுப்பி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். நிலத்தடிநீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மின் மோட்டார்களை பயன்படுத்தாத நிலைமை உள்ளது.
கடுமையான உரத்தட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் விவசாயிகள் வளர்ந்து வரும் பயிர்களுக்கு உரம் அளிக்காத காரணத்தால் பயிர்கள் தூர் வெடிக்காமல், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு கருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை (Famers Request)
மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குளம் குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், அரசின் திட்டமிடாத செயல் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 10 டிஎம்சி தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் வழியே கடலில் கலக்கும் நீரை காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் முழு கொள்ளளவுக்கு சுமார் 25,000 கன அடி தண்ணீர் வீதம் திறந்து, சிறு சிறு நீர் நிலைகளை நிரப்பி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க
மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு!