காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதியில் தொழில் முயற்சிகளை அனுமதிக்காமல், தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதாக முதல்வர் உறுதியளித்தார். இந்த செய்தி டெல்டா விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக இருக்கிறது.
காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து பெறுவதற்குச் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மேலும் காவிரி டெல்டா பகுதியில் தொழில் முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவான முன்முயற்சிகள் விவசாயத் துறையில் ஒரு திருப்புமுனையை உறுதி செய்ததாகவும், குறுவை நெல் சாகுபடியின் பரப்பளவு அதிகரிக்க வழிவகுத்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் முதல் கூட்டத்தில் பேசிய முதல்வர், டெல்டா பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு தொழில் முயற்சியையும் டெல்டா பகுதியில் அரசு அனுமதிக்காது என்றார். டெல்டா பகுதி விவசாயத்திற்கானது. எனவே, விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல செயலdமுறைகளை அரசு செய்யுமே தவிர பாதகம் வரும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடாது எனத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020ன் படி காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 8 மாவட்டங்கள், இதில் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது.
"விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும் அரசு முனைப்புடன் பாடுபடும்" என்று தமிழ்நாடு வேளாண் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்னையில், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு சட்ட, அரசியல் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை நினைவுகூர்ந்த முதல்வர், திமுக ஆட்சியில் முதல்முறையாக விவசாயத்துக்காகப் பிரத்யேக பட்ஜெட் கொண்டு வரப்பட்டது என்றார். மேலும், ரூ.65.11 கோடி செலவில் பாசனக் கால்வாய்களில் தூர்வாரப்பட்டு, 2021 ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம் குறுவை நெல் சாகுபடி பரப்பு 46-ல் முதல் முறையாக 4.9 லட்சம் ஏக்கரைத் தாண்டியது. இந்த வருடங்கள் விவசாயம் மூலம் சாதனை படைத்ததையும் நினைவுப்படுத்திப் பேசியுள்ளார்.
காவிரி நீரை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் டெல்டா பகுதியில் விவசாயத்திற்கு போதிய நீர் கிடைத்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயம் செழிப்புடன் செயல்பட வகையாய் அமையும் எனவும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்க மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!